80% பொருட்களுக்கு பூஜ்ஜிய வர்த்தக வரி: இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்து

புதுடெல்லி: இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை திறக்க இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அவர், “இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று கூறினார்.

துறைசார் ஆதாயங்களைப் பற்றி பேசுகையில், ‘‘ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் போன்ற உழைப்பு சார்புமிகுந்த தொழில்கள் அதிகப் பயன்பெறும் தொழில்களில் முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், CEPA ஒரு சமநிலையான, நியாயமான, விரிவான மற்றும் சமமான கூட்டு ஒப்பந்தம் என்றும் , இது இந்தியாவிற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும் மேம்பட்ட சந்தை வசதியை வழங்கும் என்றும் கோயல் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை வழங்கும் என்றும், இதன் மூலம் வர்த்தகப்போட்டியும் , பொருளாதார வளர்ச்சியும் உத்வேகம் பெற வழிவகை ஏற்படும் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 88 நாட்களில் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூஷ் கோயல், மே மாத தொடக்கத்தில் அதாவது 90 நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். ‘‘ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% தயாரிப்புப் பொருட்களும் , 80% வர்த்தகம் பூஜ்ஜிய வரியை ஈர்க்கும்’’ என்றார். மீதமுள்ள 20% நமது ஏற்றுமதியை அதிகம் பாதிக்காது என்பதால், இது ஒரு வெற்றி-வெற்றி ஒப்பந்தம் என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.