`அரசியலில் ஈடுபட ஆர்வமா?' – 1973-ல் வெளியான ஜெயலலிதாவின் பேட்டி #AppExclusive

ஜெயலலிதா சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்:

படத்திற்கு ஒப்பந்தம் ஆவதற்கு முன், நீங்கள் மிகவும் முக்கியமாய் என்ன கவனிப்பீர்கள்?

கதையையும், அதில் வரப்போகும் என் பாத்திரத்தையும் கவனிப்பேன் பிறகு, இயக்குநர் யார் என்பதையும் கவனிப்பேன்.

உங்களுக்கு முன்போல் இப்போதெல்லாம் அதிகப் படங்கள் இல்லை என்று சொல்கிறார்களே? அப்படிப் படங்கள் இல்லாததற்கு என்ன காரணம்?

படங்கள் இல்லை என்று யார் சொன்னது? எப்போதும் போல், நாள்தோறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அளவிற்கு, ஓய்வு நேரமே இல்லாத அளவிற்குப் படங்கள் இருக்கின்றன.

Jayalalithaa

உங்கள் படங்கள் தோல்வியடைவதைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

நான் இதுவரையில் நடித்த மொத்தப் படங்களில் தோல்வியடைந்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படித் தோல்வி அடைந்த படங்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. அதற்கு மாறாக, அந்தப் படம் தோல்வியடையக் காரணங்கள் என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பேன். தவிர, வாழ்க்கையில் எப்போதுமே வெற்றியைக் கண்டால், அந்த வெற்றியே கசக்க ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் தோல்வியடைந்தால்தான் மீண்டும் சிரமப்பட வேண்டும் என்ற தென்பு உண்டாகும். அப்படிச் சிரமப்பட்டு அடையும் வெற்றி மேலும் அதிகமாய் இனிக்கும்.

தமிழ்ப் படவுலகத்தை நீங்கள் விமரிசனம் செய்ய முடியுமா?

எனக்கு வாழ்வளித்து வரும் தமிழ்ப் படவுலகத்தை நான் விமரிசித்தால் அது நன்றி கெட்டத்தனமாக இருக்கும்.

நீங்கள் அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடப் போவதாகக் கேள்விப்பட்டோம். உண்மையா?

நாள்தோறும், படப்பிடிப்பு, உடற்பயிற்சி, நாட்டியப் பயிற்சி இவற்றையெல்லாம் முடிப்பதற்குள் பாதி மூச்சுக் காணாமல் போய் விடுகிறது. இன்னும் இதற்கு மேல் ‘தம்’ சேர்த்துக் கொண்டு முழு மூச்சுடன் அரசியலில் குதிக்க எவ்வளவு காலம் ஆகுமோ?

உங்களை மிகவும் கர்வம் பிடித்தவர் என்று கூறுவதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?

அப்படிச் சொல்பவர்களுக்கெல்லாம் கடவுள், புத்திக்குப் பதிலாகத் தலையில் களிமண்ணை நிரப்பி விட்டாரென்று நினைக்கிறேன்.

நீங்கள் நேரம் கழித்துப் படப்பிடிப்பிற்கு வருவதாகப் படத்துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்களே?

இப்படித் தவறான கருத்துக்கள் பரவ, காரணங்கள் பல இருக்கின்றன. ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன். ஒரு முறை, `எங்கிருந்தோ வந்தாள்’ படப்பிடிப்பின்போது, காலை ஏழு மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை, ‘கால் ஷீட்’டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் இல்லாத சில காட்சிகள் முதலில் எடுக்க வேண்டியிருந்ததால், தயாரிப்பாளர் பாலாஜி, `நீங்கள் பத்து மணிக்குப் படப்பிடிப்பிற்கு வந்தால் போதும்’ என்று என்னிடம் முன்பே கூறிவிட்டார். அதற்குத் தக்கவாறு, மறுநாள் சரியாகப் பத்து அடிக்கும் போது படப்பிடிப்பிற்கு வந்தேன். பாலாஜியின் நண்பரொருவர்-தயாரிப்பாளர் ஷபிகான் என்பவர்-பாலாஜியோடு ஸ்டூடியோவிற்கு ஏழு மணிக்கே வந்து விட்டார். நான் ‘செட்’டிற்குள் நுழையும் போதே, ”பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இவ்வளவு தாமதமாக வர ஆரம்பித்தால், தயாரிப்பாளர்கள் பிழைத்தாற் போலத்தான். பாவம், பாலாஜி!” என்று விஷயம் தெரியாமல், ஏதோ தன் பணம் பறிபோனது போல சலித்துக் கொண்டார். எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தாலும், இவருக்குப் பதில் சொல்வதன் மூலம் என் தரத்தைக் குறைத்துக் கொள்வானேன் என்று பேசாமலிருந்து விட்டேன். இதே தயாரிப்பாளர் இந்த விஷயத்தை நிறையப் பேர்களிடம் சொல்லியிருப்பார். இதே போல எத்தனையோ நிகழ்ச்சிகள்! இதுதான் உண்மை.

இந்தியப் படங்களில் முத்தக் காட்சிகள் அனுமதிக்கப்பட்டால், முத்தக் காட்சிகளில் நீங்கள் நடிப்பீர்களா?

I will cross my bridges when I come to them.

பாலம் அருகே வந்த பிறகுதானே அதை எப்படித் தாண்டுவது, தாண்டுவதா, வேண்டாமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்.

உங்கள் திருமணம் எப்போது? அப்படித் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் படத்துறையைச் சார்ந்தவரை மணப்பீர்களா? அல்லது வேறு யாராவதா?

இந்த விவரங்களையெல்லாம் ஆண்டவனிடம் கேட்டுக் கொள்ளுங்களேன்!

இன்று தமிழ்ப் படவுலகில் பல புதுமுகங்கள் மள மளவென்று முன்னேறி விட்டார்களே? அவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுவதுண்டா? அவர்களுக்கு ஏதாவது புத்திமதிகள் சொல்ல விரும்புகிறீர்களா?

நான் எப்போதும் போட்டியை வரவேற்பவள். போட்டியிருந்தால் தான் எந்தத் துறையிலும் முன்னேற உற்சாகம் ஏற்படும். இந்தக் காலத்துப் புது முகங்களுக்கு நான் என்ன புத்திமதி கூறுவது? அவர்கள் பிறருக்குப் புத்திமதி சொல்வார்களே தவிர, யாருடைய புத்திமதியையும் அவர்கள் கேட்டுக் கொள்ளமாட்டார்கள்.

மாளிகையைப் போல் வீட்டைக் கட்டியிருக்கும் நீங்கள், அதில் தனியாக வசிப்பதில் `போரடிக்க’வில்லை?

நான் தனியாக இல்லையே! என்னுடன் என் சித்தி, சித்தப்பா, மற்றொரு சித்தியின் மகள், என்னுடைய ஏழு குழந்தைகள் (என் பிரிய நாய்கள்), பன்னிரண்டு வேலைக்காரர்கள் – இத்தனை பேரும் மொத்தமாக இருக்கிறோம்.

(07.01.1973 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.