தொடங்கியது பேச்சுவார்த்தை: நிபந்தனை விதிக்கும் ரஷ்யா; உறுதி காட்டும் உக்ரைன்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தை இந்திய நேரப்படி 3.50 மணிக்குத் தொடங்கியது. உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ், வெளியுறவு இணை அமைச்சர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ரஷ்ய தரப்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனட் ஸ்டல்ஸ்கி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதை செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

உடனடியான போர்நிறுத்தம் தான் பேச்சுவார்த்தைக்கான தங்கள் இலக்கு என்று உக்ரைன் உறுதிபடக் கூறியுள்ளது. இதுவரை நடந்துள்ள போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் போர் நிறுத்தமே தேவை என்றும் ரஷ்யப்படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் இருநாடுகளிடையே ஒப்பந்தம் செய்வது அவசியம் எனவும், அதற்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது, ஐரோப்பிய யூனியனை காரணம் காட்டி ரஷ்ய எல்லையில் ஐரோப்பிய நெருங்கி வருவதை ஏற்க முடியாது எனவும், இதற்கு உக்ரைன் காரணமாக இருக்கக்கூடாது எனவும் ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.

அதுபோலவே ஐரோப்பிய யூனியனில் தங்களை இணைக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளதால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே பெலாரஸ், மின்ஸ்க் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கி வைத்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அவசரநிலை அல்லாத ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை தானாக முன்வந்து வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.