"இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாம்னு இருக்கேன்!"- ஆர்.கே.செல்வமணி

“மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த விஷயமா இருக்கு. எதிர்த்து நின்னவங்க எல்லாரும் பெரிய திரைப்பிரபலங்கள். சமீபத்தில் வெற்றி பெற்றவங்க. என்னைத் தோல்வி அடைய செய்யணும்னு பெரிய டீம்மோட வொர்க் பண்ணுனாங்க. இது எல்லாத்தையும் எதிர்கொண்டு நான் வெற்றி பெற்றதுக்குக் காரணம் என்னுடைய சங்க உறுப்பினர்கள். இவங்களைத் தவிர யாருமில்ல. நிறைய உதவி செஞ்சாங்க. குறிப்பாக விக்ரமன், உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, சுந்தர் சி, முருகதாஸ், நம்பிராஜ், கே.கண்ணன், ரவிமரியா, ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சரண், கிளாரா, முத்து வடுகு, ரமேஷ் பிரபாகரன், திருமலை போன்ற இயக்குநர்கள் கூட இருந்து வெற்றியை சாத்தியப்படுத்துனாங்க!”

இயக்குநர் சங்கத் தேர்தல் வெற்றி குறித்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ஆர்.கே.செல்வமணி. அவரிடம் கேட்பதற்கு நம்மிடம் சில கேள்விகள் இருந்தன.

உங்களை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் சார் போன் பண்ணி வாழ்த்து சொன்னாரா?

“பாக்யராஜ் சார் போன் பேசுறதுக்கு முயற்சி பண்ணுனரானு தெரியல. போன் Switch off ஆகிருச்சு. காலையிலதான் வீட்டுக்கு வந்தேன். இரவு முழுவதும் தூங்காம இருந்ததால காலையில வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். இப்போதான் போனுக்கு சார்ஜ் போட்டேன். இதனால, பாக்யராஜ் சார் போன் பண்ணுனரானு தெரியல. வீட்டுல மனைவி ரோஜா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.”

ஆர்.கே.செல்வமணி

இந்த வெற்றியை நீங்க எதிர்பார்த்தீங்களா?

“நிச்சயமா எதிர்பார்த்தேன். ஆனா, பயமும் இருந்தது. எல்லாரும் படம் எடுக்குறப்போ வெற்றியடைவோம்னு நினைச்சுதான் எடுப்போம். அப்படித்தான் எதிர்பார்த்தேன். பெரிய வெற்றியடைவோம்னு நினைச்சேன். ஆனா, என்னை எதிர்க்குறவங்களுக்குப் பின்னாடி இருக்குறவங்களை நினைக்குறப்போ அச்சம் இருந்தது. பிறகு, இந்தத் தேர்தலை நான் எதிர்கொள்ள முடியாதபடி பல்வேறு அவதூறுகளை பலர் பேர் மூலமா பரப்புனாங்க. இது எல்லாத்தையும் மீறி வெற்றி பெற்றது சந்தோஷம். இது சாதாரண விஷயமில்லை. பெரிய பிரமாண்டமா பார்க்குறேன்.”

வாக்கு வித்தியாசத்தை எப்படிப் பார்க்குறீங்க?

“கண்டிப்பா வாக்காளர்கள் வெச்சிருந்த நம்பிக்கைதான். இதுமட்டுமில்லாம, நான்கு ஆண்டுகளாக எங்களுடைய சேவையைப் பார்த்திருக்காங்க. படிப்பு கொடுத்து பட்டதாரி ஆக்குனது மூலமாக, கிட்டதட்ட 500 மாணவர்களுடைய வீட்டுல விளக்கு ஏத்தியிருக்கோம். இதுமட்டுமில்லாம, இந்த கொரோனால பட்டினி காரணமாக யாரும் சாகமா இருக்கணும்னு நிறைய உதவிகள் செஞ்சோம். எல்லாரும் கைவிட்ட போதும் சாப்பாட்டுக்கு வழி செஞ்சோம். இதெல்லாம் நாங்க பண்ணுன பெரிய விஷயம்.”

இதுவரைக்கும் பண்ணுன விஷயங்கள் எல்லாம் வேற ஏதாவது பண்ணலாம்னு ஐடியா இருக்கா?

ஆர்.கே.செல்வமணி

“இதுவரைக்கும் நல உதவிகள் நிறைய பண்ணியிருக்கேன். இனி வரும் காலங்களில் 25 உதவி இயக்குநர்களை இயக்குநர்களாக உருவாக்கலாம்னு இருக்கேன். இதுதான் என்னுடைய முதல் பணியா இருக்கும். இலவச நலத் திட்ட உதவிகளுக்குத்தான் என்னுடைய முன்னுரிமை. 25 முதல் இயக்குநர்களை உருவாக்கணும்னு நினைக்குறேன். இதுக்கான வேலைகளை ஆரம்பிக்கப் போறேன். ஆனா, இதுக்கான செலக்‌ஷன் புராசஸ்ல நான் இருக்க மாட்டேன்.”

‘மீண்டும் ஆர்.கே.செல்வமணி தலைவர்’ இதை எப்படிப் பார்க்குறீங்க?

“மீண்டும்னு கேட்குறது எனக்கு பழகி போனது. பத்து முறை மீண்டும் தலைவர் ஆகியிருக்கேன். எனக்கே இது சலிப்பு ஏற்படுத்திவிட்டது. இதுக்குப் பிறகு சரியான நபர்களை தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கணும்னு நினைக்குறேன். பத்தாவது முறையோட இதை நிறுத்திக்கணும்னு நினைக்குறேன். என்னோட வெற்றிக்குப் பெரிய காரணம் என்னுனு பார்த்தா எல்லாரையும் என்னோட சகோதர்களாக பார்த்தேன். யாரையும் அடிமையா பார்க்கல. பல பேரை வாடா போடானு சொல்றளவுக்கு உரிமையிருக்கு. இதை அவங்க யாரும் தப்பா எடுத்துக்காத அளவுக்கு என்னோட நேர்மையிருக்கு. என்னோட அதிகாரத்தைக் காட்டுறேன்னு யாரும் நினைச்சது இல்ல. என்னை எல்லாரும் சகோதரனா ஏத்துக்கிட்டாங்க. நான் பண்ண நல்லதுயெல்லாம் இதுக்கு பிறகுதான். என்னோட பரஸ்பர அன்பு மற்றும் உறவுனாலதான் இது நடந்திருக்கு.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.