கொல்லத்தில் இறக்கி விடப்பட்டனர் தமிழக போல்வால்ட் வீரர்களின் கருவிகளை ரயிலில் ஏற்ற மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற தமிழக வீரர்களின் போல்வால்ட் உபகரணங்களை ரயிலில் கொண்டு செல்ல மறுத்து வீரர்களை ரயில்வே அதிகாரிகள் இறக்கி விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான இந்திய ஓப்பன் ஜம்ப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட தமிழக போல்வால்ட் அணி வீரர்கள் போட்டி முடிந்த பின்னர் நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டனர். வீரர்கள் அனைவரும் சேலத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர்.தங்களது போல்வால்ட் உபகரணங்களை ரயில் பெட்டியின் வெளியே பாதுகாப்பாக கட்டி வைத்திருந்தனர். அப்போது டிக்கெட் பரிசோதிக்க வந்த ஒரு பெண் பரிசோதகர் போல்வால்ட் உபகரணங்களை ரயிலின் வெளியே கட்டக்கூடாது என்று கூறினார். மிகவும் பாதுகாப்பாகத் தான் கட்டி வைத்துள்ளோம் என்று வீரர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர் இதுகுறித்து கொல்லம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் கொல்லத்தை அடைந்ததும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விரைந்து வந்து பெட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த போல்வால்ட் உபகரணங்களை அவிழ்த்தனர். இதற்கு தமிழக வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மற்றும் வீரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போல்வால்ட் உபகரணங்களை ரயிலில் வெளியே கட்டி கொண்டு செல்ல முடியாது என்று போலீசார் கூறியதை தொடர்ந்து வீரர்கள் வேறு வழியில்லாமல் கொல்லம் ரயில் நிலையத்தில் இறங்கினர். தாங்கள் ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்டது குறித்து தமிழக வீரர்கள் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீரர்களை அடுத்த ரயிலில் சேலம் செல்ல அனுமதிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி திருவனந்தபுரம்- டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வீரர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களது போல்வால்ட் உபகரணங்கள் ரயில் பெட்டிக்குள் வைத்து  செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பிறகு  அனைவரும் அந்த ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.