கர்நாடகாவை சேர்ந்த 550 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பு- மாணவருடன் வளர்ப்பு நாயையும் மீட்க ஏற்பாடு

பெங்களூரு:
உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பல்வேறு கட்டங்களாக இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
உக்ரைனில் கர்நாடகாவை சேர்ந்த 694 மாணவர்கள் மருத்துவம் மற்றும் இதர படிப்புகள் படித்து வருகின்றனர். போர் தொடங்கும் முன்பாக அவர்களில் 57 பேர் கர்நாடகாவுக்கு திரும்பினர். கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் நேற்றுவரை 86 மாணவர்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் சிலர் பெங்களூரு வரும் வழியில் டெல்லியில் இறங்கினர்.
மேலும் 550 மாணவர்கள் உக்ரைனில் தவிக்கின்றனர். அங்கு தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் மகன், மகளை மீட்க அரசை தொடர்புகொண்டு வருகிறார்கள்.
மாணவர்களை மீட்கவும், அவர்களை கண்காணிக்கவும் கர்நாடக அரசின் தொழில்நுட்ப குழு ஒரு செல்போன் செயலியை உருவாக்கியது. அதில் மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களின் விவரங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
உக்ரைனில் சிக்கி உள்ள கர்நாடக என்ஜினீயரிங் மாணவரான ரி‌ஷப் கவுசிக் தான் வளர்த்து வளரும் வளர்ப்பு நாயுடன் தான் இந்தியா திரும்புவதாகவும், இல்லையெனில் உக்ரைனிலேயே இருந்து விடுவதாகவும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ரி‌ஷப் கவுசிக்குடன், அவரது வளர்ப்பு நாயையும் பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக பெங்களூருவை சேர்ந்த செல்ல பிராணிகள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக உக்ரைனில் இருக்கும் ரி‌ஷப் கவுசிக்குடன், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
உக்ரைனில் பரிதவித்து வரும் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை நிருபர்களிடம் கூறும்போது, ‘‘உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்க யாரும் முயற்சி செய்யவில்லை. அங்கு நமது மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது மகள் மற்றும் அவளுடன் உள்ளவர்கள் தண்ணீர் கிடைக்காமல் கழிவறை குழாயில் வரும் தண்ணீரை குடித்து வருகின்றனர். அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.