முந்தும் முன்னாள் எம்எல்ஏ… உறவினரை முன்னிறுத்தும் சிட்டிங் எம்எல்ஏ! -பரபரக்கும் ஓசூர் மேயர் ரேஸ்

பழைமையும், பெருமையும் தாங்கிப்பிடிக்கும் வணிக வீதிகளையும் சந்தைகளையும் கொண்ட ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க புள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஓசூர் 2019-ல்தான் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளை உள்ளடக்கி, முதல் முறையாக மாமன்ற தேர்தலைச் சந்தித்த இந்த மாநகராட்சியும் தி.மு.க-வின் வசமாகியிருக்கிறது. தி.மு.க 21 வார்டுகளிலும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 16 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும், பா.ஜ.க மற்றும் பா.ம.க தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவும் தி.மு.க-வுக்குக் கிடைத்திருப்பதால், மேயர் நாற்காலியை அந்தக் கட்சியினரே அலங்கரிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சத்யா

34-வது வார்டில் வெற்றி பெற்ற எஸ்.ஏ.சத்யா மேயர் நாற்காலியை நோக்கி நகர்கிறார். இவர், 2001முதல் 2006 வரை நகர்மன்ற கவுன்சிலர், 2006 முதல் 2011 வரை நகர்மன்ற சேர்மன், 2019-ல் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் எம்.எல்.ஏ போன்ற பதவிகளை வகித்துள்ளார். தி.மு.க-வில், ஓசூர் மாநகரச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பிலிருக்கிறார். எஸ்.ஏ.சத்யாவுக்கு அடுத்தபடியாக, 7-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்தய்யா மேயர் ரேஸில் அடியெடுத்து வைக்கிறார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பிரகாஷின் உறவினர்தான் இந்த ஆனந்தய்யா. மேயர் ரேஸில் முந்தும் முன்னாள் எம்.எல்.ஏ-வான எஸ்.ஏ.சத்யாவும், சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷும் இருதுருவ அரசியலை முன்னெடுக்கிறார்கள். கட்சியினர் மத்தியில் இருவரும் நட்புப் பாராட்டினாலும், மறைமுகமாக ஒருவரையொருவர் வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்களாம்.

ஓசூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷ் ‘தளி’ தொகுதியைச் சேர்ந்தவர். ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது, தளி தொகுதியை விட்டுவிட்டு ஓசூர் தொகுதியில் வந்து அவர் போட்டியிட்டதை எஸ்.ஏ.சத்யா விரும்பவில்லை. ஏனெனில், இடைத்தேர்தல் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யாவும் சட்டமன்றத் தேர்தலில் மறுபடியும் சீட் கேட்டிருந்தார். அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தளி பிரகாஷ்தான் காரணம் என வன்மம் கொள்கிறார் அவர். இப்போதும், தனது வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக, மேயர் பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறாரோ என்றும் எம்.எல்.ஏ பிரகாஷ் மீது கோபம் கொள்கிறார் எஸ்.ஏ.சத்யா.

ஆனந்தய்யா

அதே சமயம், மேயர் ரேஸில் சாதியப் பின்னணியையும் கையிலெடுத்திருக்கிறது ஒருத்தரப்பு. கவுடா சமூகத்தினருக்கே மேயர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷின் உறவினரான 7-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தய்யா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு ப்ளஸ் என்றாலும் மேயர் இருக்கைக்கு பொருத்தமானவர் இல்லை என்ற குரலும் அதே சமூகத்துக்குள் கேட்கிறது.

இப்படியிருக்க, மேயர் பதவிக்கு எஸ்.ஏ.சத்யாவின் பெயரையே தி.மு.க தலைமை அறிவிக்கப் போகிறது என்ற தகவலையும் பகிர்கிறார்கள் உள்விவரம் அறிந்த நிர்வாகிகள். அதேபோல, துணை மேயர் பதவிக்கான ரேஸிலும் பரபரப்பான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓசூர் நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவரான மாதேஸ்வரன் உள்ளிட்ட சிலர் துணை மேயர் பதவிக்கான நாற்காலியைப் பிடிக்க வட்டமடிக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.