இந்தியா-இலங்கை முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். அத்துடன் சரியாக ஆடாததால் மூத்த வீரர்கள் அஜிங்யா ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விளையாடப்போகும் முதல் டெஸ்ட் போட்டி இது தான். இதனால் மிடில் வரிசையில் இரு இடங்களுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி இடையே போட்டி நிலவுகிறது.

விராட் கோலி சாதிப்பாரா?

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி இது என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு சர்வதேச சதமும் அடிக்காத விராட் கோலி 100-வது டெஸ்டிலாவது சதம் காண்பாரா? என்ற ஆவல் தொற்றிக் கொண்டுள்ளது.

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் முதல் இரு நாட்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக இருக்கும். போக போக சுழலின் தாக்கம் எடுபடும். நிச்சயம் ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பும். ஆனால் முதல் நாளில் இருந்தே சுழன்று திரும்புமா அல்லது 4-வது நாளில் இருந்தா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் ஆதிக்கம் மேலோங்க வாய்ப்புள்ளது.

உள்ளூரில் இந்தியா எப்போதும் அசுர பலம் வாய்ந்த அணி என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதுவும் தற்போதைய இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்குகிறது. உள்ளூரில் கடைசி 14 டெஸ்ட் தொடர்களை வரிசையாக கைப்பற்றி வீறுநடை போடும் இந்தியா அந்த சாதனை பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாகியுள்ளது.

கருணாரத்னே பேட்டி

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லை. பேட்டிங்கில் கருணாரத்னே, நிசாங்கா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா சவால் அளிக்கக்கூடிய திறமைசாலிகள். பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் விளையாடமாட்டார் என்று இலங்கை கேப்டன் கருணாரத்னே தெரிவித்தார்.

கருணாரத்னே மேலும் கூறுகையில், ‘இது இலங்கையின் 300-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய கவுரவமாகும். இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்க எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இது விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதை அறிவேன். இந்த போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இலங்கை வீரர்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். எல்லோரும் நல்ல நிலையில் உள்ளோம். இரு டெஸ்டிலும் அவர்கள் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

‘இலங்கை அணி இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அந்த பெருமையை விட்டு விடக்கூடாது என்ற எண்ணமே இந்தியாவுக்கு நெருக்கடியாக இருக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே எங்களது வேலை’ என்றும் கருணாரத்னே குறிப்பிட்டார். இந்திய மண்ணில் 20 டெஸ்டுகளில் ஆடியுள்ள இலங்கை அணி 11-ல் தோல்வியும், 9-ல் டிராவும் கண்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு…

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹனுமா விஹாரி அல்லது சுப்மான் கில், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது ஜெயந்த் யாதவ் அல்லது குல்தீப் யாதவ்.

இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே (கேப்டன்), லாஹிரு திரிமன்னே, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சன்டிமால், நிரோஷன் டிக்வெல்லா, லசித் எம்புல்டெனியா, பிரவீன் ஜெயவிக்ரமா அல்லது விஷ்வா பெர்னாண்டோ, சுரங்கா லக்மல், லாஹிரு குமாரா.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைத்ததில்லை- கோலி

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டி இந்திய வீரர் விராட் கோலி விளையாடப்போகும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த இலக்கை எட்டும் 12-வது இந்தியர் என்ற சிறப்பை பெற உள்ள 33 வயதான விராட் கோலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இது ஒரு நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். கடவுளின் கருணையால் இது நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்க மிக கடினமாக உழைத்திருக்கிறேன். இச்சாதனை எனக்கும், எனது குடும்பத்தினர், பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய தருணமாகும். இந்த டெஸ்ட் போட்டியால் அவர்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறார்கள்.

சிறுவயதில் இருந்தே குறைந்த ரன்களை இலக்காக கொண்டு ஒரு போதும் விளையாடியதில்லை. பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என்றே எப்போதும் நினைப்பேன். முதல் தர கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பாக ஜூனியர் அளவிலான கிரிக்கெட்டிலேயே 7-8 இரட்டை சதங்கள் அடித்துள்ளேன். நீண்ட நேரம் களத்தில் நின்று உற்சாகமாக அனுபவித்து விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம். இது போன்ற விஷயங்கள் தான் நமது உண்மையான திறமையை வெளிக்கொண்டு வரும்’ என்றார்.
தெண்டுல்கர், கங்குலி வாழ்த்து

100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு மைல்கல். நாட்டுக்காக ஒரு வீரர் விளையாடத் தொடங்கும் போது 100 டெஸ்ட் என்பது ஒரு கனவாக இருக்கும். ஏனெனில் 100 டெஸ்டில் ஆடுவது எளிதான விஷயம் அல்ல. கோலிக்கு இது ஒரு மகத்தான தருணம். இன்னும் அவர் நிறைய சாதனைகள் படைப்பார் என்று நம்புகிறேன்’ என்று கங்குலி குறிப்பிட்டார்.

தெண்டுல்கர் கூறுகையில், ‘என்ன ஒரு அற்புதமான சாதனை. 2007-08-ம் ஆண்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது விராட் கோலி பற்றி முதல்முறையாக கேள்விப்பட்டேன். அப்போது மலேசியாவில் நடந்து கொண்டிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அதில் ஒரு வீரர் நன்றாக ஆடுவதாக என்னிடம் கூறினர். அது தான் கோலி. பின்னாளில் நானும், அவரும் இணைந்து இந்திய அணிக்காக விளையாடினோம். எங்களது பயணம் நீண்ட காலம் இல்லை என்றாலும் என்னுடன் இருந்த சமயங்களில் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததையும், ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியதையும் அறிவேன். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பே அவரது உண்மையான வெற்றி’ என்றார்.
சாதனை துளிகள்

இந்தியா-இலங்கை அணிகள் மொத்தத்தில் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. எஞ்சிய 17 டெஸ்ட் டிராவில் முடிந்தது. இவற்றில் இருந்து சில சாதனை துளிகள் வருமாறு:-

அணி அதிகபட்சம்: இலங்கை-952/6 டிக்ளேர் (கொழும்பு, 1997), இந்தியா-726/9 டிக்ளேர் (மும்பை, 2009).

அணி குறைந்த பட்சம்: இலங்கை-82 ரன் (சண்டிகார், 1990), இந்தியா- 112 ரன் (காலே, 2015).

அதிக ரன்கள் குவித்தவர்: தெண்டுல்கர் (இந்தியா)-1,995 ரன் (25 டெஸ்ட்), ஜெயவர்த்தனே (இலங்கை)- 1,822 ரன் (19)

தனிநபர் அதிகபட்சம்: ஜெயசூர்யா-340 ரன் (கொழும்பு, 1997), ஷேவாக் (இந்தியா)- 293 ரன் (மும்பை, 2009)

அதிக விக்கெட்: முரளிதரன் (இலங்கை)- 105 விக்கெட் (22), கும்பிளே (இந்தியா)-74 விக்கெட் (18)
புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்- ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு டெஸ்ட் அணியாக தற்போது நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதற்குரிய எல்லா பெருமையும் விராட் கோலியையே சாரும். அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து அணியை முன்னெடுத்து செல்வேன். ரஹானே, புஜாரா ஆகியோரது இடத்தை நிரப்புவது எளிதல்ல. இந்திய அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. வெளிநாட்டில் பெற்ற வெற்றிகள், டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது எல்லாவற்றிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். இப்போது அவர்கள் பெயர் அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை அவ்வளவு தான். மற்றபடி அவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிந்து போய் விடவில்லை. எங்களது வருங்கால அணித்திட்டத்தில் நிச்சயம் அவர்கள் இருப்பார்கள்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.