வாஷிங்டன்,
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் ரஷியாவிலும், அதன் கூட்டாளியான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு எதிரான விரோதத்தைத் தொடர்ந்து, உலக வங்கி குழு ரஷியா மற்றும் பெலாரசில் உள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பைத் தொடங்கியபோது உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கண்டனம் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.