நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு.. திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்.!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரி மூலம் முறைகேட்டினை அரங்கேற்றி சென்னை உயர் நீதிமன்றத்திடம் ‘சான்றிதழ் பெற்ற தி.மு.க.விற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்.” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான வகையில், ஆளுகிறவர்களைப் பார்த்து மக்கள் மட்டும் அல்ல, அரசு அதிகாரிகளே அஞ்சக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன் நான் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது என்றும், தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்றும், நடந்து முடிந்த தேர்தல் முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தேன். என்னுடைய கூற்று தற்போது சென்னை உயர் – நீதிமன்றத்தின்மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கேற்ப ஒரு தேர்தல் தில்லுமுல்லு சம்பவம் நடைபெற்று. அது சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பத்தாவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பழனி செல்வி என்பவரும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவரும் தலா 284 வாக்குகள் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பின்னர் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டுவிட்டு, முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிருபணமாகியுள்ளதாக தெரிவித்ததுடன், தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார். ஓர் அரசு அதிகாரியே தி.மு.க.வினரால் மிரட்டப்படுகிறார் என்றால், சாதாரண வேட்பாளர்கள் எம்மாத்திரம்! தி.மு.க.வினரின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர், தகுந்த ஆதாரத்துடன், சாதுர்யமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இவரைப் போல் துணிச்சலாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள், பண வசதியின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள், தி.மு.க.வினரின் மிரட்டல்களுக்கு பயந்து – நீதிமன்றத்தை அணுகாதவர்கள், விவரமின்மை காரணமாக நீதிமன்றத்தை அணுகாதவர்கள் என பல பேர் இருக்கிறார்கள். 

இதேபோல வாக்குப் பதிவிலும் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் தக்கப் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.