தீவிரம் அடையும் ரஷியப் படைகள் தாக்குதல்..! பயத்தில் வெளியேறும் பொதுமக்கள்

கீவ், 
உக்ரைன் தலைநகரை சுற்றிவளைப்பதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. மரியுபோல் நகரில் தாக்குதல்கள் நீடிக்கின்றன. 17 நாள் போரில் 1,300 வீரர்கள் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது வன்மம் கொண்டு ரஷியா தொடங்கி உள்ள போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று இந்த போர் 17-வது நாளை எட்டியது. இந்த போரினால் இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகியவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ரஷிய படைகள் வட கிழக்கில் இருந்து உக்ரைனின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றன. டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் ஏற்கனவே முற்றுகையிட்ட இடங்களில் இருந்து தாக்குதல் தொடுத்து வருவதால் ஒரு நகரத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை.
கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர்.
ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரஷிய படைகளின் பெரும்பகுதி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கீவ் நகரின் தெற்கு ராணுவ விமான நிலையம், ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. இங்குள்ள உணவு பதப்படுத்தும் சேமிப்புக்கிடங்கு, அதிகாலை நேரம் நடத்தப்பட்ட குண்டுமழையில் தீப்பிடித்து எரிந்தது.
மேற்கில் லுட்ஸ்க் மற்றும் இவானோ பிராங்கிவ்ஸ்க் ஆகி இடங்களில் ராணுவ விமான நிலையங்கள், ரஷிய தாக்குதலால் நிலை குலைந்து போய் உள்ளன. லுட்ஸ்க் மீதான தாக்குதலில் உக்ரைன் படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக மேயர் தெரிவித்தார்.
டினிப்ரோ நகரை முதன் முறையாக ரஷிய படைகள் குறி வைத்து வான் தாக்குதல் நடத்தின. அதிகாலை நேரத்திலேயே அங்கு குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது உக்ரைனின் 4-வது பெரிய நகரம் ஆகும். 10 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய படையின் தொடர் தாக்குதலால் மரியுபோல் நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல் தொடரும் பட்சத்தில், தலைநகரமான கீவ் மற்றும் பிற பகுதிகளுக்கும் இந்த ஆபத்து நேரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மரியுபோல் நகர் மீதான 12 நாள் தாக்குதலில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய மக்களும், உயிரை உறைய வைக்கிற பனியில் வாடுகின்றனர்.
மரியுபோல் நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷிய படையினர் 80-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்த மசூதி மீது தொடர் குண்டு வீச்சு நடத்தினர். உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்தவொரு தகவலும் இல்லை. அங்கு சிக்கியுள்ள மக்களுக்கு குடிநீர்கூட கிடைப்பதில்லை என்பது மானுட சோகமாக அமைந்துள்ளது. ஆனாலும் மரியுபோல் நகரில் தாக்குதல்கள் நீடிக்கின்றன.
வாசில்கிவ் நகர் மீது 8 ஏவுகணைகளை ரஷிய படைகள் வீசின. இதை அந்த நகர மேயர் நடாலியா பாலசினோவிச் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் உறுதி செய்தார். ஏவுகணை தாக்குதலில் விமானநிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஓடுபாதையும் முற்றிலும் சேதம் அடைந்தது. ஏவுகணை விழுந்து வெடி மருந்து கிடங்கில் தீப்பிடித்தது.
மேலும் இந்த நகரில் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட நீண்ட தூர ஏவுகணையால் தாக்கியதில் ஆயதப்படைகளின் வானொலி மற்றும் வானொலி என்ஜினீயரிங் புலனாய்வு மையம் ஆகியவை முடக்கப்பட்டன.
தெற்கு உக்ரைனில் மைகோலேவ் நகரைச்சுற்றிலும் ரஷிய படைகள் கடும் குண்டுவீச்சில் ஈடுபட்டன. அங்கு ஒரு ஓட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவற்றையும் ரஷியப்படைகள் குறிவைத்து தாக்கின.
மிகப்பெருமளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ள ரஷியா, தொடர்ந்து புதிய துருப்புகளை அனுப்பி வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கார்கிவ், மரியுபோல், மைக்கோலைவ், சுமி நகரங்களில் ஓய்வின்றி குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இந்த நகரங்களில் சிக்கியுள்ள மக்கள் மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி அவதிப்படுகிறார்கள்.
ரஷியா நடத்தியுள்ள 17 நாள் போரில் 1300 உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதே நேரத்தில் ரஷிய படைவீரர்கள் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக மேற்கத்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ரஷியப் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால், உக்ரைனின் இர்பின் நகரில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 18வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இர்பின் நகரில் இடிந்த வீடுகள், உருக்குலைந்த சாலைகளின் நடுவே பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.