பசுமை விவசாயத்திற்கான வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம்… – மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்

பெரும் போகத்தில் சேதனப் பசளையை சரியாகப் பயன்படுத்திய விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றுள்ளனர்.

அதில் ஈடுபடாத விவசாயிகளுக்கும் முறையாக தெளிவுபடுத்தி ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் பசுமை விவசாயத்துக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.

சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று, (15) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

பெரும் போகத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் 48 சேதனப் பசளை உற்பத்தியாளர்களைத் தெரிவு செய்து, உர விநியோக நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்கும் நோக்கத்தில், பசுமை விவசாய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லிகளுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகளை சேதனப் பசளை விவசாயத்தில் ஈடுபடுத்துவது சவாலான ஒரு பணியாகும். எவ்வாறாயினும், அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மிகுந்த உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் மற்றும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, வெற்றிகரமான முடிவுகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

விவசாயிகளை உரிய முறையில் தெளிவுபடுத்துவதுடன், உரிய நேரத்தில் தரமான உரங்களை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.

கடந்த சில அரசாங்கங்களுக்கு விவசாயத்தில் நம்பிக்கை இருக்கவில்லை.  பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன. அவர்களின் அறிவு மற்றும் தரமான உற்பத்திகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

வாரத்திற்கு இரண்டு தடவைகள் அரசாங்க அதிபர்கள் தலைமையில் உரக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியதோடு, உர உற்பத்தியாளர்களுக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும் போகத்தில் சேதனப் பசளையைப் பயன்படுத்தி வெற்றியடைந்துள்ளதாக உர உற்பத்தி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, உர செயலக அதிகாரிகள், உர உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியிருந்ததோடு, அனைத்து மாவட்ட செயலாளர்களும் காணொளி தொழிநுட்பம் மூலம் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

15.03.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.