கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை போராட்டம் அறிவிப்பு..!!

புதுடெல்லி,
கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவி நிபா நாஸ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று  சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டார். ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. 
இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நாளை போராட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
முன்னதாக இறுதி விசாரணை நிறைவடைந்து 20 நாட்களுக்கு பிறகு ஹிஜாப் வழக்கில் 15-ந் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. இதனால் இந்த தீர்ப்பின் மீது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதன்படி ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று  தீர்ப்பை அறிவித்தது. அந்த தீர்ப்பில் பள்ளி-கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்து உத்தரவு செல்லும் என்றும், மாணவிகளின் ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர். 
இதுகுறித்து தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் நிகழ்வு அல்ல. குரானில் ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தவில்லை. சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. அதன்படியே கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை செல்லாது என்று கூறி யாரும் எதிர்க்க முடியாது. அதனால் அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய இந்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மாணவிகளை கல்லூரிக்கு வெளியே நிறுத்திய கல்லூரி முதல்வர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது” இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.