தமிழகத்தில் இனி அதுக்கும் நுழைவு தேர்வா? வெளியான அதிர்ச்சி அறிக்கை.!

பட்டப் படிப்புகளுக்கு இனி நுழைவுத் தேர்வு கொண்டுவருவது சமூகநீதியை சிதைக்கும் செயல் என, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த நுழைவுத் தேர்வை, தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தவும், மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் உள்ள அனைத்துக் கேள்விகளும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கவும் யுஜிசி முடிவு செய்துள்ளது.

மேலும், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு முறையைப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கலாம் என்றும் பிற தனியார் அரசு கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. ஒன்றிய அரசின் இம்முயற்சி சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.

சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இச்செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படுவது இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். எந்த நுழைவுத் தேர்வும் இல்லாமல் தமிழ்நாட்டில் தரமான உயர்கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உலகத் தரத்தில் உள்ளது.

ஆனால் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்கள் பெரிய அளவில் உயர்கல்வியில் சேர்ந்து பயில்வதை சிதைத்து அவர்களை உயர்கல்வியைக் கற்க முடியாத நிலைக்குக் கொண்டுவரவே இந்த நுழைவுத் தேர்வு நடவடிக்கை. எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் பயில நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று அந்த அறிக்கை மூலம் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.