ராகுல்காந்தியின் ஆலோசனையை தொடர்ந்து குஜராத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் 50 சிறிய கட்சிகள்: ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் புது வியூகம்

காந்திநகர்: குஜராத் தேர்தலுக்கு தேசிய கட்சிகளை காட்டிலும், அம்மாநிலத்தை சேர்ந்த 50 சிறிய கட்சிகள் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன். ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் புது வியூகங்களை வகுத்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. இந்தாண்டு கடைசியில் இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. குஜராத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், அம்மாநில சிறிய கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. மாநிலத்தின் 22 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், பாஜக மற்றும் காங்கிரஸைத் தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்கவில்லை. எந்தவொரு மூன்றாவது கட்சியும் அம்மாநில மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 2017ம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக – காங்கிரஸ் தவிர ராஷ்ட்ரிய கிராந்தி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ-எம் ஆகிய கட்சிகள் களத்தில் இருந்தன. இந்திய பழங்குடியினர் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. மற்ற சிறிய கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால் வரவிருக்கும் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் களத்தில் இறங்க தயாராகி வருகின்றன. இந்த அனைத்துக் கட்சிகளும் பாஜக மற்றும் காங்கிரஸின் வாக்கு வங்கியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன. அதேநேரம் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையைப் பயன்படுத்திக் கொள்ள, காங்கிரஸ் வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூட, கடந்த வாரம் குஜராத் காங்கிரஸ் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர். சிறிய கட்சிகளின் உதவியுடன் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஷங்கர் சிங் பகேலாவின் ஜன் விகல்ப் மோர்ச்சா கட்சி  வரவிருக்கும் தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க முயற்சிக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில், படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தில் தேசிய கவனத்தை ஈர்த்த ஹர்திக் படேலை காங்கிரஸ் கட்சி நம்பியுள்ளது. காரணம், அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அதனால் குஜராத் தேர்தலை தீர்மானிக்கும் படேல் சமூக வாக்குகள் ஆளும் பாஜகவுக்கு எதிராக திரும்பினால், காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 சதவீதற்கு மேல் வாக்குகளை பெற்றதால், இந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகியோரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆளும் பாஜகவை வீழ்த்த புதிய தேர்தல் பொறுப்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காந்தி கவுரவ் யாத்திரைகுஜராத் தேர்தலை முன்னிட்டு வியூகங்களை வகுக்க, மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் ராகுல் காந்தியை விரைவில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கிடையில், ‘காந்தி கவுரவ் யாத்திரை’ என்ற பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. வரும் ஏப்ரல் 6ம் தேதி அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து தொடங்கி ஜூன் 1ம் தேதி டெல்லியில் இந்த யாத்திரை முடிவடையும். இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், ‘இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், மத நல்லிணக்க செய்தியை பரப்பும் விதமாக இரண்டு பாதயாத்திரை நடத்தப்படும். அவற்றில் ஒன்று ‘காந்தி கவுரவ் யாத்திரை’ ஏப்ரல் 6ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி ஜூன் 1ம் தேதி டெல்லியில் முடிவடையும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.