இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை: சித்தராமையா

பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் நேற்று தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும். தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னார்.

ஆனால் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே கூட்டணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்த பெரு நிறுவனங்கள் அரசை கட்டுப்படுத்துகின்றன. நமது நாட்டில் உள்ள 142 பெரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் 19 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாயமானதாக எச்.கே.பட்டீல் பேசும்போது கூறினார்.

இதற்கு யார் பொறுப்பு?. அதனால் தான் அந்த எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகின்றன. மின்னணு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்று கூறி அதை ஒரு தொழில்நுட்ப வல்லுனர் என்னிடம் செய்து காட்டினார். தேர்தல் ஆணையரை நியமிக்க அரசு, எதிர்க்கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதன் மூலம் தேர்தல் ஆணைய கமிஷனர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும்.

இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. இதற்கு நூற்றுக்கணக்கான காரணங்களை கூற முடியும். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய தூய்மையை செய்து கொள்ளாவிட்டால் ஜனநாயகத்தை காப்பது கடினம்.

நேர்மையானவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி செல்வதை தடுக்க வேண்டும். அதற்கேற்ப தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.