உக்ரைன் போர் உத்திகள் | ராணுவ ஜெனரல்கள் மீது அதிருப்தியில் ரஷ்ய அதிபர்: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்தியில் அதிபர் புதினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அதனால் புதின் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், “புதின் தனது ராணுவ ஜெனரல்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார். போர்க்களத் தகவல்களில் உண்மைக்கு மாறான நிலவரங்களை தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாக புதின் ஆத்திரத்தில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் நடந்த ரஷ்ய, உக்ரைன் தரப்பு பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தருவதாக கூறப்படுகிறது. ரஷ்யா படைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இதனை சந்தேகப் பார்வையுடனேயே உக்ரைன் பார்க்கிறது. ரஷ்யா தனது தாக்குதல் கிழக்கு நோக்கி நகர்த்தலாம் என சந்தேகிப்பதாக அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி, “சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நாம் (மேற்கத்திய நாடுகள்) ஒன்றிணைந்து போராடுகிறோம் என்றால் அமெரிக்காவிடம் இன்னும் அதிகம் உதவிகள் கேட்கும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது. இந்தக் கடினமான நேரத்தில் டேங்குகளும், ஆயுதங்களும் தேவைப்படுகின்றன. சுதந்திரத்திற்கான இந்தப் போரைத் தொடர ஆயுதங்கள் கொடுங்கள்” என்று வேண்டியுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு வர்த்தகச் செயலர் ஹினா ரெய்மோண்டோ, “வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய நேரமிது. உக்ரைனின் சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மைக்காக நிற்க வேண்டிய நேரமிது. புதினின் போருக்கு தூபம் போட்டு ரஷ்ய நிதி ஆதாரத்தை பெருக்கக் கூடாது. செர்கயின் இந்தியப் பயணம் அதிருப்தியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.