மீனவர் பிரச்சினை | மத்திய அரசுடனான தமிழக உறவு மோசமாகும்: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் அச்சம்

புதுடெல்லி: இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர், மீனவர்கள் பாதிப்பால் மத்திய, தமிழக அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமடையலாம் என அச்சம் தெரிவித்தார்.

இது குறித்து மக்களவயில் தேனி தொகுதி எம்.பி.யான பி.ரவீந்திரநாத் பேசியதாவது: ”இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் நமது மீனவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை நான் இங்கு முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே தமிழக மீனவர்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கச்சத்தீவை மீட்பதற்கும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதற்கும் அரசு முனைப்பான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், இலங்கைக் கடல் பரப்புக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன் பிடிக்க உரிமம் பெற்ற இந்திய மீனவர்களை அனுமதிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கம் முன்மொழிய வேண்டும். மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நஷ்டஈடு நிதி ஒதுக்கி, மாற்று வழிகளைத் தேர்வு செய்ய விரும்பும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் பிரச்சினைகளில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத்துக்கும், புது தில்லிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து, நெருக்கடியான சூழ்நிலை ஏற்படலாம். எனவே, கடல் வளத்தை மேம்படுத்தவும், குறிப்பாக, தமிழகக் கடலோர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர உங்கள் மூலம் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.