தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு; NHAI அறிவிப்பு

NHAI hikes rates in 28 toll plazas across Tamilnadu: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தவுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள 5 சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என தமிழக கோரிக்கை வைத்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளான செங்கல்பட்டில் உள்ள பரனூர், சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு ஆகியவையும் அடங்கும்.

சென்னைக்கு அருகில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகள் மாநகராட்சி அல்லது நகராட்சி எல்லைக்குள் அமைந்து, அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை அகற்றுமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் என்றும், இதை மீறியுள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே, தமிழகத்தில் ஐந்து அல்லது ஆறு சுங்கச்சாவடிகள் மூடப்படும் என ஊகங்கள் பரவின.

இதையும் படியுங்கள்: பன்னூர் அல்லது பரந்தூர்: சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்

ஆனால் இதற்கு நேர்மாறாக, NHAI புதன்கிழமை திருத்தப்பட்ட கட்டண விகிதங்களை அறிவிக்கத் தொடங்கியது. வாகன ஓட்டிகள் இந்த வாரம் முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அதன்படி, சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் ஒருவழிப் பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்குச் செல்ல, கார்கள் ஏற்கனவே ரூ.600க்கு மேல் கட்டணம் செலுத்தி வருகின்றன. இப்போது, ​​அத்தகைய பயணங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாகச் செலவிட வேண்டும்.

லாரிகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனிடையே தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும், எனவே அவர்கள் அட்டவணைப்படி கட்டணங்களை திருத்தியுள்ளதாகவும் NHAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.