இந்தியாவை ஆதரிக்கும் "ஒரு சக்தி வாய்ந்த நாடு" பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ளது- இம்ரான் கான்

லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.
இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்தது. மேலும், எம்கியூஎம் கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் தற்போது , இந்தியாவை ஆதரிக்கும் ஒரு “சக்திவாய்ந்த நாடு” பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க ரஷியாவிற்கு  பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சென்று இருந்தார். இதனால் அமெரிக்காவை மறைமுகமாக “சக்திவாய்ந்த நாடு”  என குறிப்பிட்ட இம்ரான் கான் இந்தியாவை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இம்ரான் கான் கூறுகையில், ” சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை நாட்டிற்கு முக்கியமானது .பாகிஸ்தானால் அதன் உச்சக்கட்டத் திறனைத் தொட முடியாததற்குக் காரணம் மற்ற சக்தி வாய்ந்த நாடுகளைச் பாகிஸ்தான் சார்ந்திருப்பதுதான்.
சுயாதீனமான வெளியுறவுக் கொள்கை இல்லாத ஒரு மாகாணம் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது. வெளிநாட்டு உதவிக்கு ஈடாக மற்ற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதை விட ஒரு நாட்டின் நலன்களை உயர்வாக வைத்து சுதந்திரமான முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது ” என தெரிவித்தார்.
பின்னர் அவர் அமெரிக்காவைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு “சக்திவாய்ந்த நாடு” தனது சமீபத்திய ரஷிய பயணத்தால் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில் ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அதன் நட்பு நாடான இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.