`புகார் தெரிவித்தவரின் வீட்டுக்கு முன் மட்டும் சாலை போடாத ஒப்பந்ததாரர்…!' – என்ன நடந்தது?

ஒரு புதிய சாலையைப் போடும்போது அங்கிருக்கும் பழைய சாலையை நீக்கிவிட்டு புதிய சாலையைப் போடவேண்டும் என்பது விதி. பெரும்பாலான இடங்களில் பணத்தை மிச்சம் செய்யப் பழைய சாலைகளை நீக்குவது கிடையாது. சாலைகளின் உயரம் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, புதிதாகப் போடப்படும் அனைத்து சாலைகளும் பழைய சாலைகளை நீக்கிய பின்னர்தான் போடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போடப்பட்டுள்ள புதிய சாலை

இந்த சூழலில், தாம்பரம் சேலையூர் பகுதியில் ரிக்கி கார்டன் தெரு அருகே ஒரு புதிய சாலை போடப்பட்டது. அந்த ஒப்பந்ததாரர் பழைய சாலையை நீக்காமல், புதிய சாலையைப் போடும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். இந்த செயல்குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் இளங்கோ ரகுபதி என்பவர் மாநகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்திருந்தும் பழைய சாலை நீக்கப்படாமல் புதிய சாலை போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி புதிய சாலை போடப்படும்போது, புகார் அளித்த இளங்கோவின் வீடு அமைந்திருக்கும் இடத்தில் மட்டும் சாலையைப் போடாமல் மற்ற இடங்களுக்கு மட்டும் சாலை போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு தரப்பில், “அவர் பள்ளம் தோண்டி சாலையைப் போடச் சொல்கிறார். ஏற்கெனவே சாலை போடுவதில் தாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் அந்த இடத்தை விட்டுவிட்டு சாலை போடப்பட்டுள்ளது. இப்போது அவர் சொன்னாலும் உடனடியாக அந்த இடத்தில் சாலை போடப்படும்” என்று கூறுகிறார்கள்.

போடப்படாத சாலை

கடந்த கனமழை சமயத்தில் சாலை உயரமாக இருப்பதால் இளங்கோவனின் இல்லம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பலமுறை கேட்டுக்கொண்டும் அவர் புகாரைத் திரும்பப் பெறவில்லை. “தரைமட்டத்திலிருந்து பல லட்சங்களைச் செலவு செய்து கஷ்டப்பட்டு வீட்டை உயர்த்தியுள்ளேன். இப்போது சாலை மீண்டும் உயர்ந்தால் அடுத்த மழையில் பாதிக்கப்படுவோம்” என்று இளங்கோவன் புகார் மனுவைத் திரும்பப் பெறவில்லை. இதனால் அவரின் வீட்டுப் பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் சாலை போடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.