பாக். நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டு உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ -இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இருப்பினும் பதவியில் இருந்து விலக மறுத்து , கடைசி வரை போராடுவேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்த நிலையில், அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் காசின் கான் நிராகரித்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின.

பதவியில் நீடிப்பாரா இம்ரான் கான்: இன்று ஒட்டெடுப்பு!

இதற்கிடையே, நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், அரசுக்கு எதிரான சதியில் வெளிநாட்டிற்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என அதிபருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும் என தெரிவித்தார். இதை அடுத்து பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்திவேகமாக பரவும் கொரோனா புதிய திரிபு: விரைவில் ஊரடங்கு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.