“ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவி" – கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதால், அந்த இடத்தை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போட்டி போடுகின்றனர். இது தவிர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மம்தா பானர்ஜி ஒரு புறமும், சந்திரசேகர் ராவ் ஒரு புறமும் எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். இதில் காங்கிரஸ் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதில் சரத்பவார் அப்பதவிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு மம்தா பானர்ஜியும் சரத்பவாரை சந்தித்து பேசிய போது மூத்த தலைவர் என்ற முறையில் பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்படும் அணிக்கு தலைமை தாங்கவேண்டும் என்று சரத்பவாரிடம் கேட்டுக்கொண்டார்.

மம்தா பானர்ஜி

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அணிக்கு தலைமை தாங்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சரத்பவாருக்கு ஆதரவாக தீர்மானம்

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் சரத்பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சரத்பவாரிடம் கேட்டதற்கு, தனக்கு அப்பதவியை ஏற்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “எங்களது கட்சியின் இளைஞரணியினர் என்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவியேற்கும் படி கூறி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அப்பதவிக்கு வர விரும்பவில்லை. பொறுப்புக்களை ஏற்க விரும்பவில்லை. பாஜகவிற்கு எதிராக மாற்று அணியை உருவாக்க முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஆதரவு கொடுக்கவும், வலு சேர்க்கவும் தயாராக இருக்கிறேன். அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகார மையங்கள் இருக்கலாம். எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கப்பட்டால் அது காங்கிரஸ் இல்லாமல் உருவாக்க முடியாது.

காங்கிரஸுக்கு பவார் ஆதரவு

காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு கிராமம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் தொண்டர்கள் இருக்கின்றனர். எனவே பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்கும் போது காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் அதற்கு செல்வாக்கு இருக்கிறது. அதனை கவனத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்படவேண்டும். அப்படி செயல்பட்டால் மாற்று அணியை உருவாக்குவதில் சிக்கல் இருக்காது.

சரத் பவார் – உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டுமானால் உண்மை நிலையை புறக்கணிக்க முடியாது. நாட்டில் ஒரே ஒரு கட்சி வலுவானதாக இருந்தால் புதின் போன்ற நிலைதான் ஏற்படும். புதின் மற்றும் சீனா அதிபர்கள் சாகும் வரை தங்களது நாட்டிற்கு தலைமை தாங்குவார்கள். அது போன்ற ஒருவர் இந்தியாவுக்கு வரமாட்டார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியை சரத்பவார் ஏற்க மறுத்திருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித்தலைவர் ரவிகாந்த் கூறுகையில், “எங்கள் தலைவர் முடியாது என்று சொன்னாலும், உங்கள் ஒருவரால் மட்டுமே அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வர முடியும் என்று கூறி அப்பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.