சக தோழர்களை துடைப்பத்தால் தாக்கும் பள்ளி மாணவர்… வைரலான வீடியோ – விசாரணையில் அதிகாரிகள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை மிரட்டுவது, கேலி கிண்டல் செய்வது, மாணவர்களுக்கு உள்ளாகவே தாக்கிக் கொள்வது போன்ற வருத்தம் அளிக்கும் சம்பவங்கள் சமீப நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதே போன்றதான ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றுள்ளது.

கல்வி

சுமார் 800 மாணவர்கள் வரை கல்வி பயின்று வரும் அந்த அரசுப் பள்ளியில், மேல்நிலை வகுப்பில் பயின்றுவரும் மாணவர் ஒருவர், துடைப்பத்தைக் கொண்டு சக மாணவர்களை வகுப்பறையில் சரமாரியாகத் தாக்குகிறார். பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி, தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு வீடியோ ஒன்றில், பள்ளி பருவ தோழிகளுடன் மாணவர்கள் இணை இணையாக அமர்ந்து பேசுகின்றனர். இந்த இரு வீடியோக்களும் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்திடும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை தொடர்பு கொண்டோம். இணைப்பு ஏற்கப்படாததினால், அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். “இந்த தகவல் இன்று காலையில் தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்.

அதன் தொடர்ச்சியாக, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி தலைமையாசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள், அறிக்கை சமர்பித்த உடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.