"தப்பை ஒத்துக்கங்க".. ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக .. மஹளா ஜெயவர்த்தனே ஆவேசம்!

இலங்கை
பொருளாதார சீரழிவு குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பெரும் வேதனை வெளியிட்டுள்ளனர். உண்மையான தலைவர்களாக இருந்தால் தவறுகளை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன்
மஹளா ஜெயவர்த்தனே
ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இலங்கை வரலாறு காணாத பொருளாதார சீரழிவில் சிக்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பணவீக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை. வாங்க முடியாத அளவுக்கு பற்றாக்குறையும் இருக்கிறது.

இந்த நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார சீரழிவு குறித்து குமுறல் வெளியிட்டுள்ளனர். முன்னாள் கேப்டன் மஹள ஜெயவர்த்தனே இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வீழ்ச்சி அடைந்த இலங்கை.. பரிதவிக்கும் மக்கள்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதும் வேதனை தருகிறது. மக்களின் தேவைகளை அரசாங்கம் நிராகரிக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. போராடும் பொதுமக்களை கைது செய்வதை ஏற்க முடியாது. இலங்கை வக்கீல்கள் போராடும் மக்களுக்காக துணிச்சலுடன் துணை நிற்பதை பெருமையுடன் பார்க்கிறேன்.

உண்மையான தலைவர்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார்கள். நமது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய மாபெரும் அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்களின் துயரத்தில் நாடு துணை நிற்க வேண்டும். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய பிரச்சினைகள். தகுதிவாய்ந்த மனிதர்கள் மூலம் இதை சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி வந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர். அவர்கள் பதவி விலக வேண்டும். அதன் பிறகு சரியான அணியின் துணையுடன் நாட்டை சரி செய்ய வேண்டும். நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டும்.

இனி நேரத்தை வீணடிக்க கூடாது. அமைதியாக இருந்து, சரியான செயலை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் மஹளா ஜெயவர்த்தனே. மகிந்தா ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும். தகுதியான வேறு தலைவர்கள் வசம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று மஹளா ஜெயவர்த்தனே மறைமுகமாக கூறியிருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

“அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்”.. சிங்களர்கள் குமுறல்!

இதேபோல தற்போதைய இலங்கை அணியின் நட்சத்திர வீரரான பானுகா ராஜபக்சேவும்
இலங்கை பொருளாதார நெருக்கடி
குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், நான் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், என்னால் இலங்கை மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. நாள் முழுவதும் போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் அடிப்படைக் குரல்கள் முடக்கப்படுகின்றன. அவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஆனால் 2.2 கோடி மக்களின் குரலை நாம் புறக்கணிக்க முடியாது. இலங்கை மக்கள் எழுப்பும் குரலை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதைக் கேட்காமல் தவிர்க்க முடியாது. எந்தவிதமான பயமும் இல்லாமல் வாழ உரிமை உடையவர்கள் இலங்கை மக்கள். தங்களது குடும்பத்துக்குத் தேவையானதை செய்து கொடுக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. இப்போது கிடைப்பதை விட இன்னும் சிறந்ததைப் பெற அவர்கள் தகுதியானவர்கள். சம்பந்தப்பட்ட அனைவரும் மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் அவர்கள் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை மக்களின் போராட்டத்தில் மெல்ல மெல்ல அந்த நாட்டு பிரபலங்களும் இணைய ஆரம்பித்துள்ளதால் ராஜபக்சே சகோதரர்களுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது.

அடுத்த செய்திஏப்ரல் 12 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.