விலை கடும் வீழ்ச்சி: தக்காளியை நசுக்கியும், சாலையோரங்களில் கொட்டியும் விவசாயிகள் ரத்தக்கண்ணீர்…

தருமபுரி: உணவுப்பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் தக்காளி வீலை கடும் வீழ்ச்சி காரணமாக, அதை பல மாதங்கள் பாதுகாத்து விளைவித்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். பழுத்த தக்காளியை பறிக்காமல் அப்படியே செடியில் காய விட்டும், கீழே விழுந்த தக்காளிப்பழங்களையும்,  நசுக்கியும், சாலையோரங்களில் கொட்டியும், கால்நடைகள் மேயவும் விட்டு விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.  இதை பார்ப்போர் கண்களிலும்  கண்ணீர் வரவழைக்கிறது.

தமிழ்நாட்டில், தக்காளி அதிகம் விளைச்சல் செய்யப்படும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டமே முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாட உணவில் இடம்பெறும் தக்காளிக்கு மட்டும் நிரந்தர விலை கிடைப்பது இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இயற்கை பேரிடர், கொரோனா தாக்கம் போன்ற காரணங்களால், வெளி மாநலிங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு,  மற்றும் தமிழ்நாட்டிலும், தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக,  ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயிலிருந்து  150 ரூபாய் வரை விற்பனை செய்யபட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனர். இதனால்,  தருமபுரி மாவட்டத்தில்  விவசாயிகள் வழக்கமாக பயிரிடுவதை விட தக்காளி அதிகளவில் பயிரிட்டனர். ஆனால், அவர்களது போதாத நேரம் தக்காளி விலை வீழ்ச்சியடைத்தொடங்கிவிட்டது.

அறுவடைக்கு தயாராக தக்காளிகள் இருந்த நேரத்தில், தக்காளியின் விலை வேகமாக படிப்படியாக சரியத் தொடங்கின. மேலும் தக்காலி வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், கடைகளில் தக்காளி விலை கிலோ 10ரூபாய் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மொத்த கொள்முதல் வியாபாரிகள், விவசாயிகளிடம் தக்காளியை கிலோ ரூ. 1 முதல் 2க்கு மட்டுமே வாங்குகிறார்கள். விவசாயிகளே உழவர் சந்தைக்கு எத்துச்சென்று ரூ.5க்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய பணிகளில் ஈடுபடும் பெண் ஆட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தக்காளியை கிலோ ரூ.2-க்கும் குறைவான விலைக்கு விற்கும்போது ஆட்களுக்கு வழங்கும் கூலியைக் கூட அந்த காசு மூலம் ஈடு செய்ய முடியாது. முதலீடு, மருந்து செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட செலவினங்களை கணக்குப் பார்த்தால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல ஆயிரம் செலவிட்டு, தக்காளி பயிரிட்டு, அதை சில மாதங்கள் பாதுகாத்து, தற்போது  அறுவடை செய்யப்படும் நிலையில்,  விலை கடுமையான வீழ்ச்சி காரணமாக, தக்காளி பறிக்கும் தொழிலாளர்களுக்கு  கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குகூட   பணம்  கிடைக்காததால்  விவசாயிகள் வேதனையில் சிக்கி கண்ணீர் விடுகின்றனர்.

பல விவசாயிகள் பழுத்த தக்காளியைக்கூட அறுவடை செய்யாமல், விளை நிலங்களிலேயே அப்படியே விட்டுள்ளதால், கால்நடைகளுக்கு உணவாகவும்,   தக்காளி பழங்கள்  அழுகியும் வீணாகி வருகிறது.  பறித்த தக்காளிகளை விலை இல்லாததால் சாலை ஓரத்தில் விவசாயிகள் கொட்டி செல்லும் பரிதாபங்களும் அரங்கேறி வருகின்றன. அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யும் நோக்கத்துடன் பூவும், பிஞ்சும், பழமுமாக உள்ள செடிகளையும் சேர்த்து  அப்படியே சில பகுதிகளில் டிராக்டர் மூலம் உழவடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தக்காளி சாகுபடி செய்து வந்த லவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தக்காளியில் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள்  ஒரே நேரத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளதின் காரணமாக  தக்காளி வரத்து அதிகரித்து  தக்காளியின் விலை தற்போது கடுமை யாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தங்களின் கண்ணீருக்கு விடிவுகாலமே கிடையாதா என கண்ணீர் வடிக்கின் றனர்.

தக்காளிக்கு  குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உருவாக்குவது மட்டுமே, தக்காளி விவசாயிகளின் இந்த வேதனைக்கு தீர்வாக அமைய முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த வாகனம்  நடைமுறையில் உள்ளதாக என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

விவசாயிகளை பாதுகாப்பாக கூறிக்கொள்ளும் மத்தியமாநில அரசுகள், அவர்களின் விலை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயித்து, அதை விற்பனை செய்வதையும் முறையாக செயல்படுத்தினால் மட்டுமே, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். பல சமயங்களில் இயற்கையே விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும் சேர்ந்து வஞ்சித்து வருவது, விவசாயிகளின் கண்ணீல் ரத்தக்கண்ணீரை வரவழைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.