ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி நிறுவனம்!

இந்தியாவின் முக்கியமான வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎப்சி., ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது.
1991-ம் ஆண்டுக்கு பிறகு தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி முதலில் அனுமதி அளித்தது ஹெச்டிஎப்சி வங்கிக்குதான். 1994-ம் ஆண்டு முதல் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது.
முதலில் ஹெச்டிஎப்சியின் துணை நிறுவனங்களான ஹெச்டிஎப்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹெச்டிஎப்சி உடன் இணைய இருக்கிறது. அதன் பிறகு, அடுத்தகட்டமாக ஹெச்டிஎப்சி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
image
பல ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி தேவைப்படுவதால் இந்த இணைப்பு முழுமையாக முடிவடைய 18 மாதங்கள் தேவைப்படும் என அறிவிக்கபட்டிருக்கிறது. இந்த இணைப்பு காரணமாக எந்த ஒரு பணியாளர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். மேலும், ஹெச்டிஎப்சி கிளைகள் எதுவும் மூடப்படாது. பின்னாட்களில் இவை ஹெச்டிஎப்சி வங்கி கிளையாக மாறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இணைப்புக்கு பிறகு எஸ்பிஐக்கு அடுத்து இரண்டாவது பெரிய இந்திய வங்கியாக ஹெச்டிஎப்சி வங்கி உயரும். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியை விட ஹெச்டிஎப்சி வங்கி இரு மடங்கு பெரியதாக இருக்கும்.

ஒருங்கிணைந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் இருப்பார். தற்போது ஹெச்டிஎப்சியின் தலைவராக இருக்கும் கெகி மிஸ்திரி வங்கியின் இயக்குநர் குழுவில் இருப்பார்.
45 ஆண்டுகளுக்கு மேலாக ஹெச்டிஎப்சி இயக்குநர் குழுவில் இருக்கும் தீபக் பரேக் வயது காரனமாக விலகுகிறார்.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைபடி 75 வயதுக்கு மேல் இருக்கும் யாரும் இயக்குநர் குழுவில் இருக்க முடியாது. அதனால், தீபக் பரேக் இயக்குநர் குழுவில் இணையவில்லை. 1978-ம் ஆண்டு ஹெச்டிஎப்சி என்னும் வீட்டுக்கடன் நிறுவனம்தான் தொடங்கப்பட்டது. அதில் இருந்து 1994-ம் ஆண்டு உருவானதுதான் ஹெச்டிஎப்சி வங்கி. தற்போது ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் இருந்து உருவான ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது ஹெச்டிஎப்சி. இதனை தந்தையின் தொழிலை மகன் கவனிப்பது போல என தீபக் பரேக் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற இணைப்புகள் நடைபெறுகிறது என்றால், இது தொடர்பாக யூகங்கள், செய்திகள் எப்படியும் முன்கூட்டியே வெளியாகும். ஆனால் இந்த இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
image
பங்குச்சந்தைகள் ஏற்றம் திங்கள்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை நல்ல ஏற்றத்தை சந்தித்தன. சென்செக்ஸ் 1335 புள்ளிகள் உயர்ந்து 60000 புள்ளிகளை மீண்டும் கடந்தது. நிஃப்டி 382 புள்ளிகள் உயர்ந்து 18000 புள்ளிகளை கடந்தது. ஹெச்டிஎப்சி வங்கி 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்த்து. ஹெச்டிஎப்சி 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.13.7 லட்சம் கோடி. ஆனால் ஏப்ரல் 4-ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு இரண்டும் இணையும் பட்சத்தில் ரூ.14.2 லட்சம் கோடி சந்தை மதிப்புள்ள இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறும்.
—- வாசு கார்த்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.