ஜ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன் அதிபர் உரையாற்றுகிறார்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 41-வது நாளை எட்டி உள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகிவிட்டனர். உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷியா ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி வருகிறது. மேலும் துப்பாக்கியாலும் சுட்டு வருகின்றனர். இதில் பலர் இறந்தனர். ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சிதைந்து வருகிறது. பலர் உயிருக்கு பயந்து அங்கிருந்து வெளியேறி விட்டனர். கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டவர்கள் சித்ரவதை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர்.
பலரது உடல்கள் கறுப்பு உடையால் சுற்றப்பட்டு புதைக்கபட்டு இருக்கிறது. சிலரது கைகள் பின் புறமாக கட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். அந்த நகர வீதிகளில் பிணங்கள் சிதறி கிடக்கின்றன.
புச்சா நகரில் ரஷியா நடத்திய கொடூர தாக்குதலை புகைப்படங்கள் எடுத்து உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். அங்கு இனப்படுகொலை நடத்தப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தி உள்ளார்.
மேலும் படுகொலை செய்ததை ரஷியா ஒப்புக் கொல்ல வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்து இருக்கிறது. தாங்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை என அந்நாடு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை ஜக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றுகிறார். அப்போது அவர் உக்ரைனில் கொடூரமாக பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து மிகவும் வெளிப்படையான விசாரணையை நடத்துவது தொடர்பாக வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.