இரட்டை இலை வழக்கு; டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

Enforcement Directory summons again to TTV Dinakaran for Two leaves symbol case: இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவில் எழுந்த குழப்பத்தில், அதிமுக பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்த இரண்டு அணிகளும் போட்டியிட்டன. இதனையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

பின்னர், சசிகலா அணி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரன் அணியினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சுகேஷ் சந்திரசேகரை தவிர, மற்ற அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. டிடிவி தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும்; மக்கள் தகவல் மையம்

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கிலும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பண மோசடி தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகரிடம் ஏழு நாள் காவலில் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் வைத்து டிடிவி தினகரனிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை கடந்த ஆண்டு விசாரித்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.