உதவி ஆய்வாளர் பணிகளுக்கான விண்ணப்ப காலத்தை நீட்டிக்க வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழக காவல் துறைக்கு 444 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி உள்ள ஆயிரக்கணக்கான காவலர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்.7) கடைசி நாளாகும். இப்பதவிக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் காவல்துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், பல காவலர்கள் குறித்த நேரத்தில் தங்களது மேலதிகாரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எனவே, குறித்த காலத்தில் ஆன்லைன் மூலம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க இயலாத நிலையில் சிரமப்படுகின்றனர் என்று தகவல்கள் வந்துள்ளன. எனவே, தகுதியுள்ள காவலர்கள், தாங்கள் உதவி ஆய்வாளர் ஆகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

எனவே, பணியில் உள்ள தகுதி வாய்ந்த உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகள் தடையில்லாச் சான்றிதழ் வழங்கத் தேவையான அறிவுரைகளை இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும், காவலர்கள் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் தடையில்லாச் சான்றிதழைப் பெற இயலாத தகுதியுள்ள காவலர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டு, தடையில்லாச் சான்றிதழை நேர்காணலின் போது சமர்ப்பிக்கும் வகையில் அனுமதிக்கத் தேவையான அறிவுரையினை, தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அரசை வற்புறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.