பஞ்சாயத்தை தொடங்கிய பன்னீர்; உஷ்ணமான எடப்பாடி; வெளியேறிய வைத்தி! – அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில், நேற்று (06.04.2022) மாலை கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் இடையே காரசார விவாதம், கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்

கூட்டத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “உட்கட்சி தேர்தல் தொடர்பாகத் தான் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்கியது முதலே சீனியர்கள் அனைவருமே இறுக்கமான மனநிலையில் தான் காணப்பட்டனர். ஜெயக்குமார் தான் பேச்சை முதலில் தொடங்கினர். ‘நான் ஜெயிலில் இருந்த போது, எனக்கு விசுவாசமாகப் பலர் செயல்பட்டனர். அவர்களுக்கு கட்சி பதவியை நான் வாங்கிக் கொடுக்க வேண்டும். என் ஆதரவாளர்களுக்குக் கண்டிப்பாகப் பதவி கொடுக்கப்படவேண்டும்’ என்றிருக்கிறார். அவர் பேச்சை இடைமறித்த ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், `ஆதரவாளர்களுக்கு எல்லாம் அப்பறம் பதவி கொடுத்துக்கலாம், முதலில் மாவட்டச் செயலாளர்களை மாற்றவேண்டும்’ என்று பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்தார்.

உஷ்ணமான எடப்பாடி:

பன்னீர் கருத்தால், முகம் சிவந்த எடப்பாடி பழனிசாமி, `இப்போ மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?’ என்று கேள்வி கேட்டார். பதிலுக்குக் குரலை உயர்த்திய பன்னீர், “அம்மா இருக்கும்போது இந்த மாற்றம் எல்லாம் நடைபெறுவது வழக்கம் தானே! ஒருத்தர் கட்டுப்பாட்டிலேயே மாவட்ட அரசியல் இருப்பது சரியல்ல. சென்னையில் கூட மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகிறது. இதையெல்லாம் விசாரித்து நாம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வெடியைக் கிள்ளி எறிந்தார்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்

பதிலுக்கு உஷ்ணமான எடப்பாடி, `அப்படியென்றால், தேனி மாவட்டச் செயலாளர் சையது கானையும் மாற்றிடலாமா? நீங்கச் சொல்லித் தானே, கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார்’ என்று அக்னி வார்த்தைகளை வீசினார். இந்த பதிலை எதிர்பார்க்காத பன்னீர், `தேவையில்லாததைப் பேசவேண்டாம். புகார் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று அவர் பேசி முடிக்கும் போது, வைத்திலிங்கம் பேச ஆரம்பித்தார். `தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்களில் எனக்குப் பிரித்துக் கொடுத்துவிடுங்கள். கடந்த காலத்தில் என் மாவட்டத்தில் வேலுமணி வந்து அரசியல் செய்தார். அவர் ஆதரவாளர்களை மருத்துவக்கல்லூரி பகுதிச் செயலாளராக நியமனம் செய்தார். இனிமேல், அதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது’ என்று கூறினார்.

வெளியேறிய வைத்திலிங்கம்:

இதற்குப் பதிலடியாக வேலுமணி, `ஏன் நீங்க மட்டும் மற்ற மாவட்டத்தில் நாட்டாமை செய்வது கிடையாதா?’ என்று குரலை உயர்த்தவும் கூட்டத்தில் களேபர காட்சிகள் அரங்கேறியது. டென்ஷன் ஆன வைத்திலிங்கம், வட மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு வார்த்தையை விசிறியடிக்க கோதாவில் குதித்தார் சண்முகம். `என்ன பத்தி பேச நீ யாரு? உன் நாட்டாமையை எல்லாம் தஞ்சாவூரில் வச்சிக்கோ’ எனத் தடித்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்யப் பதிலுக்கு வைத்திலிங்கம் வார்த்தைகளால் வறுத்தெடுக்கக் கூட்டத்திலிருந்த மற்றவர்கள் முகம் சுழிக்கும் சூழல் உருவானது.

சி.வி. சண்முகம்

ஒரு கட்டத்தில், `இப்படியே நாம சண்டை போட்டுக்கிட்டு இருந்த எந்த தேர்தலிலும் நாம ஜெயிக்க முடியாது. பேசாம சசிகலாவைக் கட்சிக்குள்ள இணைத்து கட்சியை வலுப்படுத்தும் வேலையை பார்க்கணும்’ என்று வைத்தியலிங்கம் சொல்லவும் ஜெயகுமாரும், சி.வி.சண்முகமும் அதற்கு எதிராக, `நாம் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த அம்மா குறித்து இங்கு எதற்குப் பேசவேண்டும்’ என்று காரசாரமாகப் பேசினார்கள். இதில் கோபமடைந்த வைத்திலிங்கம் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பிறகு எடப்பாடி, அவரை போனில் அழைத்து சமாதானம் செய்து மீண்டும் கூட்டத்துக்கு வரச்செய்தார்.

தூண்டிவிட்ட பன்னீர்:

அதிமுக-வில், அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 68 பேர் எடப்பாடிக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். இதுபோக, 80 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி தரப்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் தான். இதனால் தான், மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்குப் பன்னீர் அழுத்தம் கொடுக்கிறார். இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் பன்னீரும், வைத்தியலிங்கமும் போனில் பேசியிருக்கிறார்கள். அப்போது பன்னீர், `நம்மைக் கட்சியிலிருந்து ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டார்கள். வெளியே நம்மை சசிகலாவின் ஆதரவாளர்கள் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படியே போனால், நம் மாவட்டத்தில் கூட நமது ஆதரவாளர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்க முடியாது’ என்று வைத்தியலிங்கத்தைத் தூண்டி விட்டிருக்கிறா எனத் தகவல்.

எஸ்.பி.வேலுமணி

இதன் பிரதிபலிப்பு தான் ஏப்ரல் 6-ம் தேதி கூட்டத்தில் பிரச்னையாக வெடித்திருக்கிறது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் அமைப்பு தேர்தலை முதற்கட்டமாக நடத்துவது என்றும், பிறகு பதவிகளை ஒதுக்கிக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. இரண்டாம், மூன்றாம் கட்ட தேர்தல் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது” என்றனர் அந்த சீனியர் நிர்வாகிகள்.

கோவத்தில் சீனியர்கள்:

இதற்கிடையே அவைத்தலைவர் பதவி தனக்கு வேண்டும் என ஜெயக்குமார் காய் நகர்த்தியிருக்கிறார். இது தற்காலிக அவைத்தலைவரான தமிழ் மகன் உசேன் தரப்பினரைக் கோபமடைய வைத்திருக்கிறது. கட்சியின் சீனியரான அவரை இந்த ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றி அறையின் வாசலிலேயே சில மணி நேரம் அமரவைத்திருந்ததும் கட்சி சீனியர்கள் இடையே கோபத்தை உருவாகியிருக்கிறது.

அதிமுக தலைமை அலுவலகம்

`அதிமுகவில் நடந்திருக்கும் இந்த காரசாரா விவாதம் வழக்கமான ஒன்று தான்’ என சில மாவட்டச் செயலாளர்கள் தட்டிக் கழித்தாலும், ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி செய்யும் முயற்சிகளுக்குப் பன்னீர் தரப்பு போடும் முட்டுக்கட்டை தான் இந்த விவாதம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுக-வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடியும் வரை இதுபோல பல சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என்கிறது அதிமுக வட்டாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.