`வாத்தி' டு `நானே வருவேன்'… கேப்பே இல்லாமல் மூன்று படங்கள் – தனுஷின் ஷூட்டிங் பிளான் என்ன?

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது கட்டமாக ஊட்டியில் வேகமாக நடந்து வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் யோகிபாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் தனுஷின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘நானே வருவேன்’ ஸ்பாட்டில் செல்வராகவன், தனுஷ்.

இப்போது தனுஷ், ‘வாத்தி’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களும் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டப்பிங் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டே, ஊட்டிக்குப் பறந்திருக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடந்து முடிந்துவிட்ட நிலையில், அதன் இயக்குநர் மித்ரன் ஜவஹர், பேட்ச் ஒர்க்குகளை முடித்து படத்தை ரெடியாக வைத்திருக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால், ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸிற்குப் பின் அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

தம்பியின் அரவணைப்பில்.. அண்ணன்

‘நானே வருவேன்’ படப்பிடிப்பு ஊட்டியில் இன்னும் பத்து நாள்கள் நடைபெறும் என்கிறார்கள். அதனை முடித்துவிட்டு, தனுஷ் உடனடியாக ‘வாத்தி’க்குச் செல்கிறார். ஹைதராபாத்தில் நடக்கும் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக முப்பது நாள்கள் நடக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.

‘வாத்தி’யில் மாணவன், பேராசிரியர் என இரண்டு கெட்டப்புகளில் வருகிறார் தனுஷ். அவரது ஜோடியாக மலையாள நடிகை சம்யுத்தா மேனன் நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். இதற்கு முன் தெலுங்கில் ‘தொல்லி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்பட சில படங்களை இயக்கிவர் இவர். ‘வாத்தி’க்கு இசை ஜி.வி.பிரகாஷ்… படத்திற்கான பாடல்களை கம்போஸிங் செய்து கொடுத்துவிட்டார்.

‘வாத்தி’யின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனுஷ் அடுத்து ‘ராக்கி’, ‘சாணிகாயிதம்’ படங்களை எடுத்த அருண் மாதஸ்வரன் இயக்கும் படத்துக்குச் செல்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.