ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு- நடிகை ரோஜா அமைச்சரானார்

திருப்பதி:

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார்.

2019 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபோதே 2½ ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

அதன்படி 2½ ஆண்டுகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தாலும், கொரோனா தொற்று காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரனுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் அவர்களின் பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தனர். இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய அமைச்சரவை தொடர்பாக தாடப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் அரசு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து 25 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் கவர்னருக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஏற்கனவே பதவியில் இருந்த 11 பேருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நகரியில் தொண்டர்கள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை அருகிலும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்னும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

மீண்டும் அமைச்சராக தேர்வான 11 பேர் விவரம்:-

போட்சா சத்திய நாராயணா, புகனா ராஜேந்திரநாத், அடிமுலாவூர் சுரேஷ், பேடிரெட்டி ராமச்சந்திரரெட்டி, சிடிரி அப்பாலா ராஜூ, டெனிட்டி வனிதா, நாராயணசாமி, அமத்பாஷா ஷேக் பேப்பாரி, குமனூர் ஜெயராம், பினிப்பி விஷ்வரூபு, செல்லுப் போயினா ஸ்ரீனிவாசா வேணுகோபால கிருஷ்ணா,

புதிய அமைச்சர்கள் 14 பேர் பட்டியல்:-

குடிதேவா அமர்நாத், புடிமிட்டியாலா நாயுடு, டேடிசெட்டி ராஜா, ராஜன்னா டோராபீடிகா, தர்மனா பிரசாதராவ், ஜோகிரமேஷ், அம்பட்டி ராம்பாபு, மெருகு நாகர்ஜூனா, விட்டாலா ரஜினி, கோட்டு சத்தியநாராயணா, கருமுனி வெங்கடா நாகேஸ்வரராவ், நடிகை ரோஜா, காகனி கோவர்த்தன ரெட்டி, உசாரி சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. தலைமைச் செயலகத்தை ஒட்டியுள்ள காலி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது.

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் கடந்த முறை போலவே 5 துணை முதல்வர்கள் உள்ளனர். காப்பு சமுதாயம், பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.