Beast : " விஜய் உடன் படம் பண்றதுக்கான பேச்சுவாரத்தை நடந்துச்சு! ஆனா…" – செல்வராகவன் நேர்காணல்

காதல் கொண்டேனில் ஆரம்பித்து நெஞ்சம் மறப்பதில்லை வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகப் பிடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன். அவரின் புதிய அவதாரம்தான் நடிகர் செல்வராகவன். சாணி காயிதம் அவரின் முதல் படமாக இருந்தாலும், அவர் முதலில் நடித்து வெளியான படம் பீஸ்ட். பீஸ்ட் படம் குறித்து நடிகர் செல்வராகவனின் நேர்காணல் இதோ…

இயக்குநரிலிருந்து தற்போது நடிகர் செல்வராகவனாக மாறியுள்ளீர்கள்; இயக்குவதைவிட நடிப்பது எப்படி இருக்கிறது?

செல்வராகவன்

அதே வேலைதான். ஆனால் கொஞ்சம் பின்னாடி இருப்பதற்குப் பதிலாக முன்னாடி இருக்கணும். இயக்குவதைவிட நடிப்பது கஷ்டம். நடித்தப்பின் நான் எப்போதும் மானிட்டரைப் பார்ககவே மாட்டேன். இயக்குநர் சொல்வதை தான் செய்வேன். ஏனெனில் அவர்தான் அங்கு பாஸ்.

பலரிடம் நீங்கள் கதை சொல்லியிருப்பீர்கள். உங்களிடம் இயக்குநர் நெல்சன் வந்து கதை சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

பீஸ்ட் படத்தில்

எல்லா இயக்குநர்களுமே நல்லா கதை சொல்வாங்க. ஒரு 25 சதவிகிதம் கதை சொன்னாலே புரிந்துவிடும், இது எந்த மாதிரியான படம் என்று. எல்லாருமே அதில் சிறப்பானவர்கள்தான். கதை சொல்வதில் நெல்சன் மிகவும் கை தேர்ந்தவர். கதை கேட்டேன், பிடித்திருந்தது. சரி பண்ணலாம் என்று சொல்லிவிட்டேன்.

நீங்களும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ணலாம் என எப்போதாவது நினைத்ததுண்டா?

பீஸ்ட் விஜய்

நிறைய முறை அதற்கான பேச்சுகள் நடந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப்போனது. எதிர்காலத்தில் சரியாக வந்ததென்றால் கண்டிப்பாக இணையலாம். அதை அவர்தான் சொல்ல வேண்டும். மக்களிடம் அவர் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவர் டெடிகேஷன்தான் காரணம். நான் யாரையும் இதுவரை இவ்வளவு அர்ப்பணிப்போடு செட்டில் பார்த்ததில்லை. செட்டில் அவர் இருக்குமிடமே தெரியாது. நான் அவருடன் பேசியதைவிட, அவரைப் பார்த்து ரசித்ததுதான் அதிகம். இவ்வளவு வருடம் எனக்கு அவரைக் குறித்து எதுவும் தோன்றியதில்லை. ஆனால் கடைசி ஐந்தாறு ஆண்டுகளில் அவர் மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. சமீபத்தில் வெளியான அவருடைய திரைப்படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். காதலுக்கு மரியாதை என் ஃபேவரைட். அவரைப்போல நடனமாடக்கூடியவர்கள் இங்கு யாரும் இல்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

`சாணிக் காயிதம்’ படம் போஸ்டரிலேயே வித்தியாசமாக இருக்கிறீர்கள். படத்தில் உங்களை எப்படி எதிர்பார்க்கலாம்?

சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன்

எனக்கும் இதே கேள்விதான். படத்தில் நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று பார்க்க எனக்கே ஆவலாய் உள்ளது. சாணி காயிதம் இயக்குநர் அருணும் நானும் சேர்ந்து தற்போது நானே வருவேன் திரைப்படத்திலும் வேலை செய்து கொண்டிருக்கிறோம். படம் எப்படி வருமென்று கடவுள் கையில்தான் இருக்கிறது.

புதுப்பேட்டை 2 , ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது எதிர்பார்க்கலாம்?

செல்வராகவன் – தனுஷ்

புதுப்பேட்டை 2 பண்ண வேண்டுமென்றால் அதற்கு தனுஷ் வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் 2 பண்ண கார்த்தி வேண்டும். இரண்டும் வெவ்வேறு கதைக்களம், காலகட்டத்தைச் சேர்ந்த திரைப்படம். மேலும் தனுஷ் சொன்னதைப் போல ஏற்கெனவே செய்ததைவிட சிறப்பாக பண்ண வேண்டும். இல்லையென்றால் பேசாமல் இருக்கணும். சந்தர்ப்பம் அமையும்போது கண்டிப்பாகப் பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.