நம் நம்பிக்கைக்கு சாட்சி இந்த செங்கோட்டை: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‘நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி’ என, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதன் மூலம் சூரிய அஸ்தமனத்துக்குப் பின், டில்லி செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்ற பெயர், பிரதமர் மோடிக்கு கிடைத்தது.

latest tamil news

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘பிரகாஷ் பர்வ்’ விழாவில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தற்போது கேட்ட ஷபாத் கீர்த்தனையில் கிடைத்த நிம்மதியை வார்த்தைகளில் சொல்வது கடினம். தற்போதைய இந்தியாவுக்காக, கோடிக்கணக்கான மக்கள் தியாகம் செய்துள்ளனர். குருக்களின் கொள்கைகளால், இந்தியா முன்னேறி வருகிறது. பல முக்கியமான காலகட்டங்களுக்கு சாட்சியாக இந்த செங்கோட்டை இருந்துள்ளது.

இந்த பாரதபூமி ஒரு நாடு மட்டுமல்ல; சிறந்த மரபு, பாரம்பரியத்தை உடையது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில், பத்து குருக்களின் பாதங்களையும் வணங்குகிறேன். இந்தியா எந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் என்றும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் வாழ்க்கை வடிவமாக குரு கிரந்த் சாஹிப் இருக்கிறார். புதிய சிந்தனை, தொடர் உழைப்பு மற்றும் 100 சதவீதம் அர்ப்பணிப்பு இவைதான் இன்றும் சீக்கிய சமூகத்தின் அடையாளம்.

அவுரங்கசிப் கொடுங்கோல் ஆட்சி நடத்திய போது, குரு தேக் பகதூர் ஜியின் வீரம், இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக தேசத்தை எழுந்து நிற்க தூண்டியது. நம் தேசம் ஏதேனும் கொடுமைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், சில பெரிய ஆன்மா எழுந்து தேசத்தை வழிநடத்துவது, பழங்காலத்திலிருந்தே தொடர்கிறது. உலகின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன், இந்தியா யோகாவை ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.