ஏர்-கன் வைத்து சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு மிரட்டல் – மதுபோதையில் இருந்த 3 பேர் கைது

மதுரையில் சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை விசாரணையில் அது ஏர்-கன் என தெரியவந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுரை திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச் சாவடியில், காரில் வந்த நான்கு பேர் கட்டணம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, காரில் இருந்த ஒருவர், திடீரென சிறிய ரக துப்பாக்கி ஒன்றை எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை நோக்கி காட்டி சுட்டு விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் கார் மதுரை நோக்கி சென்றது. இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், மீண்டும் அவ்வழியே வந்த மகேந்திரா பொலிரோ வாகனத்தை மடக்கி பிடித்து அதில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
image
அதில் அவர்கள், தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் பொன்ராஜ் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை கைப்பற்றினர். அவை, ஏர் பிஸ்டல் மற்றம் ஏர் கன் என்றும், மதுரையில் விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது. பால் வியாபாரம் செய்யும் ஜெயக்குமார் இந்த மாதம் ஏழாம் தேதி, மதுரையில் 39 ஆயிரம் ரூபாய்க்கு ஏர் பிஸ்டலை வாங்கியுள்ளார். மற்றொரு ஆபத்தில்லாத ஏர் துப்பாக்கியும் மதுரையில் வாங்கியது தெரியவந்தது.
பழுதடைந்த துப்பாக்கிகளை சரி செய்வதற்காக கொண்டு வந்த போது, மதுபோதையில் இருந்த மூவரும் சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கிகள் அருகில் நின்று சுடும் போது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் விளையாடக்கூடிய ஏர் பிஸ்டலாக இருந்தாலும், அதனைக் காட்டி மிரட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.