நிர்ணயிக்கப்பட்ட விலையில் மானிய உரங்களை வாங்குங்கள்- விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை:
யூரியா உள்பட மானிய உரங்கள் கையிருப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை மத்திய அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுநாள்வரை,  53,420 மெ. டன் யூரியா, 10,900 மெ.டன் டிஏபி, 4,739 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 16,950 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் உர நிறுவனங்களால் இம்மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும், ஒதுக்கீட்டின்படி 97 சதவீத யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட போதிலும், இம்மாத இறுதிக்குள் 15,700 மெ. டன் யூரியா கூடுதலாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
டிஏபி உர ஒதுக்கீட்டில் இதுநாள் வரை 42 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,100 மெ. டன் டிஏபி  உரம் வழங்குவதற்கு வேளாண்மைத் துறையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
ஐபிஎல் நிறுவனத்தால், கங்காவரம் துறைமுகத்திலிருந்து  3,000 மெ. டன் டிஏபி உரம் மற்றும் இப்கோ உர நிறுவனத்தால், காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இவ்வார இறுதிக்குள் 4,500 மெ. டன் டிஏபி வழங்கப்படும்.
மேலும், டிஏபி உரத்தேவையினை ஈடுசெய்திட கிரிப்கோ நிறுவனம் இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 10,000 மெ. டன் டிஏபி உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வழங்கிட இசைவு தெரிவித்துள்ளது. 
இதில், 70 சதவீதம் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில் 25,000மெ. டன்னிற்கு  அதிகமாக பொட்டாஷ் உரம் இருப்பில் இருந்தபோதிலும், 10,000 மெ. டன் பொட்டாஷ் உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தேவையின் அடிப்படையில் ஐபிஎல் நிறுவனத்தினால்  வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த வாரத்தில் 20,000 மெ. டன் பொட்டாஷ் சரக்கு கப்பல் வாயிலாக தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக வந்தடைந்துள்ளது. 
இத்துடன் சேர்த்து, தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக 30,000 மெ. டன் பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தலைமையிடத்தில் செயல்படும் உர உதவி மையம் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கும் பகுதிகளுக்கு உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் தேவையான உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
உரப்பதுக்கல் மற்றும் உரம் கடத்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை முற்றிலும் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு ஆய்வுக்குழுவினர், உரக்கடைகளில் விற்கப்படும் உரத்தின் விலை மற்றும் உரம் விற்பனை செய்யும் போது வற்புறுத்தி இதர இணை பொருட்கள் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்சமயம், 54,000 மெ. டன் யூரியா, 22,800 மெ. டன் டிஏபி, 25,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 1,07,700 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. 
எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருப்பில் உள்ள  மானிய உரங்களை வாங்கி பயனடையும்படி வேளாண் பெருங்குடி மக்கள்  கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.