விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கண்களை கட்டிக்கொண்டு 150 கி.மீட்டர் ஸ்கேட்டிங் செய்த 9 வயது சிறுவன்

திருமலை: 150 கி.மீட்டர் கண்களை கட்டி கொண்டு 9 வயது சிறுவன் ஸ்கேட்டிங் செய்துள்ளார். திருப்பதி  மாவட்டம்,  புத்தூர் பவானி நகரை சேர்ந்த  கிருஷ்ணகுமார், பெயிண்டர். இவரது மனைவி லீலாவதி. இவர்களது மகன் பாரதிராஜா(9). இவர் ஸ்கேட்டிங் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இதனால் பாரதிராஜாவை, கிருஷ்ணகுமார் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற புத்தூரில் உள்ள டேலண்ட் ஸ்கேட்டிங் அகாடமியில் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு சேர்த்தார். இந்நிலையில், பாரதிராஜா  ஸ்கேட்டிங் மூலம் ஊட்டச்சத்தான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஒழிப்பதற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக 150 கி.மீட்டர் கண்களை கட்டி கொண்டு ஸ்கேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 6 மாதங்களாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்ட பாரதிராஜாவிற்கு மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவ்வப்போது பாரதிராஜா பயிற்சிபெறும் அகாடமிக்கு நேரில் சென்று ஊக்குவித்து உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில்,  ஆந்திர-கர்நாடக மாநில எல்லையான  நங்கிலி சுங்கச்சாவடியில் நேற்று காலை 6 மணிக்கு கண்களை கட்டி கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் விதமாக 150 கி.மீட்டருக்கு ஸ்கேட்டிங் செய்ய தொடங்கி இரவு நகரியை வந்தடைந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாரதிராஜாவை வழியனுப்பினர். கண்களை கட்டி கொண்ட பாரதிராஜாவுக்கு அவரது பயிற்சியாளர்கள் மற்றும் உடன் வந்த சிறுவர்கள் வழிகாட்டுதல் செய்ய பாரதிராஜா தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்தபடி நகரியை வந்தடைந்தார். இன்று அமைச்சர் ரோஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.