70-80களின் குணச்சித்ர நடிகர் சக்கரவர்த்தி மும்பையில் காலமானார்

ரிஷி மூலம், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த குணச்சித்ர நடிகர் சக்கரவர்த்தி(62) மும்பையில் காலமானார். சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்த இவருக்கு இன்று(ஏப்., 23) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிகை வடிவுக்கரசியின் அண்ணனாக சிறு வேடத்தில் நடித்தார் சக்கரவர்த்தி. தொடர்ந்து ரஜினியின் கிளாசிக் படமான ‛ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் தம்பியாக நடித்தார். ‛ரிஷி மூலம்' படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்து தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 'முள்ளில்லாத ரோஜா' படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து அசத்தினார்.

‛தர்ம யுத்தம்', ‛தூக்கு மேடை', 'கொட்டு முரசே', ‛உதயகீதம்', ‛புதிய பயணம்', ‛இதயம் தேடும் உதயம்', ‛முள்ளில்லாத ரோஜா', ‛ராஜாதி ராஜா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 70களில் இறுதியில் தொடங்கி 80கள் கடைசி வரை கிட்டத்தட்ட 100 படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் அண்ணன், மகன், நண்பன் என பல்வேறு விதமான குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ‛தை பொங்கல்' என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடிய கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற பாடலில் ராதிகாவுடன் இணைந்து டூயட்டும் ஆடியிருக்கிறார்.

ஒருக்கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானார் சக்கரவர்த்தி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இவர் இருக்கிறார். அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்ஸி படித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.