தினமும் ரூ20,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை: மன்கிபாத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: தினமும் ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘நாடு முழுவதும் சிறிய கிராமங்கள், நகரங்களில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நல்ல பலனை அளிக்கிறது. தினசரி ரூ.20,000 கோடி மதிப்பிலான ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப்  பரிவர்த்தனை நடந்துள்ளது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல்  பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணத்தை எடுத்துச் செல்லவோ  அல்லது ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை. ஒரு நாள் முழுவதும் கையில்  காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி  முடியும். ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன. 75வது ஆண்டு சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறது. நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. கோவிட் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அருங்காட்சியகங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. வரவிருக்கும் விடுமுறை நாட்களில் தங்கள் நண்பர்களுடன் இளைஞர்கள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும். கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்’ என்று பேசினார். ஜம்முவில் நலத்திட்ட உதவிகள்ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதியதாக கட்டப்பட்ட பனிஹல் – காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். பின்னர், சம்பா மாவட்டம் பாலி கிராமத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாட்டின் முதல் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையைப் பெறும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்தார். பின்னர், சொத்து உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட உதவும் ‘ஸ்வமித்வா’ அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசுத் தொகையை வழங்கினர். மாலையில் மும்பையில் விருதுஜம்மு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, அங்கிருந்து மும்பைக்கு செல்லும் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு, பிரதமருக்கு நாட்டின் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.