இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 90% மாக அதிகரிப்பு

கடந்த சில வாரங்களில் வெளிவந்த கொரோனா தரவுகளின்படி, இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஞாயிறிலிருந்து நேற்று வரைக்குட்பட்ட காலகட்டத்தில்மட்டும், இந்தியாவில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் ஏப்ரல் 18 முதல் 24 வரைக்குட்பட்ட காலத்தில் சுமார் 15,700 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,050 என்றே இருந்தது. கிட்டத்தட்ட 95% அதிகம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. கிட்டதட்ட 11 வாரம் பாதிப்பு குறைந்தே பதிவாகி வந்த நிலையில், தற்போதான் அது உயர்ந்துள்ளது.

பாதிப்பு அதிகம் உறுதிசெய்யப்படும் மாநிலங்களாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் தற்போது கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாம் ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் டெல்லியில் 6,326 புதிய தொற்றாளர்கள்; ஹரியானாவில் 2,296 புதிய தொற்றாளர்கள்; உ.பி.-ல் 1,278 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. இவையே நாட்டின் ஒட்டுமொத்த புதிய தொற்றாளர்களில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது.

புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தாலும்கூட, இதன் பின்னணி இன்னும் சரியாக அறியப்படவில்லை. இந்த உயர்வுக்கு ஒமைக்ரான் அல்லது ஒமைக்ரானின் புதிய பிற திரிபுகள் தான் காரணமா, அல்லது கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட்காலம் முடிவடைந்து மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்புதிறன் குறைந்துவிட்டதா என்பது பற்றிய முழு தரவுகள் இல்லை. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும்கூட, தீவிர நோயாளிகள் எண்ணிக்கையோ கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையோ அதிகரிக்கவில்லை.

கொரோனாவை நாம் எப்போதும் கணிக்க முடியாது என்பதும் நிதர்சனம். ஆகவே சுயபாதுகாப்பு மூலம் நம்மை நாம் தற்காத்துக்கொள்வதே பல பிரச்னைகளுக்கு தீர்வு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.