ஆன்லைன் வழியாக கைதிகளிடம் பேச உறவினர்களுக்கு உதவும் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள்

கரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகளை, ஆன்லைன் வழியாக சந்தித்துப் பேச, மத்திய அரசின் ‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருள் அதிகளவில் தற்போது பயன் படுத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், கடலூர்,திருச்சி, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன.

தவிர, மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் கிளைச் சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர்.

வழக்கமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள், நேரில் சந்தித்துப் பேச, சிறைத்துறை நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படுகிறது.

இச்சூழலில், மத்திய அரசின் மென்பொருள் மூலம் கைதிகளை ஆன்லைன் வழியாக, உறவினர்கள் சந்தித்து பேசுவது அதிகரித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சிறைத்துறையினர் கூறும்போது, ‘‘சிறையிலுள்ள தண்டனைக்கைதிகளை செவ்வாய், வியாழக்கிழமைகளிலும், விசாரணைக் கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் உறவினர்கள் சந்தித்துப் பேசலாம். கடந்த 2020-ல் கரோனா பரவலால்,சிறைக் கைதிகளை உறவினர்கள் நேரடியாக சந்திக்க தடை விதிக்கப்பட்டது. பதிலாக, வாட்ஸ் அப்வீடியோ அழைப்பு மூலம் கைதிகள், உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய அரசுசில மாதங்களுக்கு முன்னர், ‘இ-பிரிசன்ஸ்’ என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இதன் மூலம் முன் பதிவு செய்து ஆன்லைன் வழியாக கைதிகளுடன், உறவி னர்கள் பேசலாம்.

கடந்த சில வாரங்களாக, மாநிலம் முழுவதுமுள்ள மத்திய, மாவட்ட, கிளைச் சிறைகளில் இத்திட்டம் அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு மத்திய சிறையிலும் தினமும் சராசரியாக தலா 30 கைதிகள் இம்முறை மூலம் உறவினர்களிடம் பேசி வருகின்ற னர்’’ என்றனர்.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும் போது, ‘‘கைதிகளை சந்திக்க விண்ணப்பிக்கும் உறவினர்களிடம் செல்போன் எண், இ-மெயில் முகவரி, அரசின் ஆதார் உள்ளிட்டஅடையாள அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அவர்கள் தங்களது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகிய ஏதேனுமொன்றில் கூகுள் க்ரோம் வழியாக https://eprisons.nic.in என்று டைப் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் ‘emulakat’ என்ற பதிவை தொட்டவுடன் படிவம் வரும். அதில் அவர்களது பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, சந்திக்க உள்ள கைதியின் பெயர், உறவுமுறை, சந்திக்க உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

இறுதியாக பதிவிட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதையும் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நாங்கள் ஒப்புதல் அளித்தவுடன், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் மெயில் முகவரிக்கு, பிரத்யேக ‘லிங்க்’ அனுப்பப்படும். அதில் கைதியை சந்திக்கும் நேரம், தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த லிங்க்கை பயன்படுத்தி உள்ளே நுழைந்து சம்பந்தப்பட்ட தேதி, நேரத்தில் வீடியோ ஆன்லைன் வழியாக கைதியுடன் பேசலாம். ஒரு கைதிக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் ஒதுக்கப்படும்.

ஒரு கைதி வாரத்துக்கு ஒருமுறை இந்த முறையில் பேசிக் கொள்ளலாம். தற்போது கரோனா பரவல் உள்ளதால், மத்திய அரசின் இந்த மென்பொருள் வழியாக கைதிகள் பேசுவது அதிகரித்துள்ளது,’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.