பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்

சென்னை: 2021-2022 நிதியாண்டில் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி. இது பதிவுத்துறையில் இதுவரை ஈட்டப்படாத மிக அதிக அளவிலான வருவாயாகும். மேலும், இத்தொகையானது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகமாகும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு இத்துறைகளின் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவில் வருவாய் பங்களிப்பு மற்றும் இதர இனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்துவெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:

வருவாய் பங்களிப்பு

அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் பங்களிப்பு செய்யும் துறைகளில் பதிவுத்துறையும் ஒன்றாக உள்ளது. 2021-2022 நிதியாண்டில் இத்துறையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி ஆகும். இது பதிவுத்துறையில் இதுவரை ஈட்டப்படாத மிக அதிக அளவிலான வருவாயாகும்.

மேலும், இத்தொகையானது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகமாகும். 2020-21 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ரூ.26,95,650 ஆக உள்ள நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 11.22 சதவீதமாக உயர்ந்து ரூ.29,98,048 ஆக பதிவானது.

இதர இனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய்

திருமணங்கள், சீட்டுகள், சங்கங்கள் பதிவு மற்றும் இதர இனங்களின் கீழும் பதிவுத்துறையால் வருவாய் ஈட்டப்படுகிறது. 2021-2022 நிதியாண்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்கள்:

  • திருமணப்பதிவு – ரூ.3.80 கோடி
  • சங்கங்கள் பதிவு – ரூ.9.98 கோடி
  • சீட்டு பதிவு – ரூ.14.46 கோடி
  • இதர கட்டணங்கள் (பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் குறுந்தகடுகள் உள்பட) – ரூ.18.54 கோடி
  • பங்குச் சந்தை ஆவணங்கள் (Marketable Securities) மற்றும் காப்பீட்டுத் திட்ட ஆவணங்கள் (Insurance policies)- ரூ.366.60 கோடி என மொத்தம் ரூ.413.38 கோடி ஈட்டியுள்ளது.
  • இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.