மூணாறில் சூடு பிடிக்கும் ஷூட்டிங்| Dinamalar

மூணாறு : மூணாறில் சுற்றுலாவைப் போன்று சினிமா படப்பிடிப்புகளும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறு சுற்றுலா உலக அளவில் பிரசித்து பெற்றுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதி சுற்றுலா பயணிகளை மட்டும் இன்றி சினிமாக்காரர்களையும் வசீகரித்ததால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளைச் சார்ந்த சினிமா படபிடிப்புகள் ஏராளம் நடந்தன.

ரஜினி புதுக்கவிதை, முரளி நடித்த கீதாஞ்சலி, பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை, நடிகர் விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த பரமசிவம், விஜயகாந்த் நடித்த தவசி, மரியாதை, சூர்யா நடித்த வேல், சரத்குமாரின் ஐயா, தனுஷின் வேங்கை, அனேகன், பாலா இயக்கிய பரதேசி, பிரபு சாலமன் இயக்கிய மைனா, ஆர்யா நடித்த சர்வம், பிரகாஷ்ராஜின் அபியும் நானும், துல்கர்சல்மானின் வாயை மூடி பேசவும், அமிதாப் நடித்த நிஷப்த், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்கள் மூணாறைச் சுற்றி படமாக்கப்பட்டன.

ஹரி இயக்கிய கோவில், ஐயா, தாமிரபரணி, வேல் உட்பட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடந்தன.இதனால் சுற்றுலா வளர்ச்சி அதிகரித்ததுடன் நூற்றுக் கணக்கில் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அரசு துறைகள், தனியார் தேயிலை நிறுவனம் படப்பிடிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் மூணாறை நிராகரித்தனர்.மூணாறைப் போன்று இயற்கை எழில் நிறைந்த மலைப்பகுதிகள் அதிகம் கொண்ட இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டணம் மிகவும் குறைவு என்பதால் அங்கு படையெடுத்தனர். தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சினிமாக்காரர்களின் பார்வை மீண்டும் மூணாறு பக்கம் திரும்பியுள்ளது.

இது குறித்து மூணாறைச் சேர்ந்த சினிமா லொக்கேஷன் மேலாளர் சத்யன் கூறுகையில், தற்போது புதுமுக இயக்குனர்களின் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்தது. மூன்று படங்களுக்கு லொக்கேஷன் பார்த்து சென்றுள்ளனர்.இங்கு படப்பிடிப்பு நடத்த பல்வேறு துறைகளிடம் தனித்தனியாக அனுமதி பெற வேண்டி உள்ளது. தமிழகம் போன்று ஒரே இடத்தில் அனைத்து துறைகளிடமும் அனுமதி பெறும் வசதி செய்து கட்டணத்தை குறைத்தால் மூணாறில் படப்பிடிப்பு வேகமெடுக்கும், என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.