சென்னை: நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சை முழுமையாக முடியும் வரை அப்போலோ மருத்துவமனையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து வருபவர் விழுப்புரத்தை சேர்ந்த ரகு. மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார்.
கடந்த 5-ம் தேதி இரவு 7.30 மணி அளவில் சிறுமி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, பூங்காவின் எதிர் வீட்டில் புகழேந்தி என்பவரால் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் சிறுமியை கடித்து குதறின. தலை, கைகள், கால்களில் பலத்த காயமடைந்த சிறுமி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த வாரத்தில் சிறுமி வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் போதிய வசதி இல்லாததால், சிறுமியின் சிகிச்சை முழுமையாக முடியும் வரை மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், சிறுமியை மருத்துவமனையில் இருக்க அனுமதி அளித்துள்ளன.