திராட்சை விளைச்சல் அதிகரிப்பு: | Dinamalar

சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூரில் திராட்சை அமோகமாக விளைந்துள்ளது. ஆனால், நியாயமான விலை கிடைக்காததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், 8,௦௦௦ ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் திராட்சை பயிரிடப்படுகிறது. கொரோனா, மழை இடையூறுகளுக்கிடையே விளைச்சலை பாதுகாத்தனர். இதன் பயனாக, அமோகமாக விளைந்துள்ளது. இம்முறை நல்ல லாபம் கிடைக்குமென, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து பெருமளவில் திராட்சை வருவதால், சிக்கபல்லாபூர் திராட்சைக்கு, மவுசு குறைந்து உள்ளது. தோட்டங்களில் செழிப்பாக வளர்ந்துள்ள திராட்சைகளை விற்க முடியவில்லை. இதை வாங்கும்படி, மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் மன்றாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில், தில்குஷ், ஆர்.கே.கோல்டு, சோனகா, ரெட் ப்ளூ, சரத் உட்பட பல ரக திராட்சைகள் விளைகின்றன. இந்த திராட்சைகளுக்கு, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் வங்க தேசத்தில் அதிக ‘டிமாண்ட்’ இருந்தது. அங்கு டன் கணக்கில் அனுப்பப்படும். இம்முறை கேட்போரே இல்லை.இதற்கு முன் கிலோவுக்கு, தரம் அடிப்படையில் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இது, தற்போது 15 முதல் 20 ரூபாயாக குறைந்து உள்ளது. போட்ட முதலீடும் கிடைக்கவில்லை என, விவசாயிகள் விரக்தி தெரிவித்தனர்.

திராட்சை விவசாயிகள் கூறியதாவது: சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், கோலார் உட்பட மாநிலத்தின் பல இடங்களில், திராட்சை பயிரிடுகின்றனர். நல்ல விளைச்சல் வந்தும், எப்படி விற்பது என விவசாயிகளுக்கு வழி காண்பிக்க, ஆலோசனை கூற யாருமில்லை. குறைந்தபட்சம் ஒரு திராட்சை மார்க்கெட் கூட இல்லை.ஏப்ரல், மே மாதங்களில், மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு, ‘சீட்லெஸ்’ திராட்சை வருவது நின்றிருக்க வேண்டும். இப்போதும் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இதனால், உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் திராட்சைகள், விற்பனையாவதில்லை.
மஹாராஷ்டிராவில், திராட்சை விவசாயிகள் சங்கங்களுக்கு அம்மாநில அரசு ஆதரவளிக்கிறது. வெளிநாடுகளில் விற்பனைக்கு அரசே வசதி செய்து கொடுத்துள்ளது. ஆனால் நம் மாநிலத்தில், இது போன்ற வசதியில்லை. அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.