LIC IPO அப்டேட்ஸ்: பங்குச் சந்தை முதலீட்டில் களமிறங்கும் சிறு முதலீட்டாளர்கள்!

இந்தியப் பங்குச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி புதிய பங்கு வெளியீடு இன்றுடன் (மே 9-ம் தேதி) நிறைவடைகிறது.

முதலில் 60,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவு செய்திருந்த இந்திய அரசு பல்வேறு உலக காரணிகளால் இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை 21,000 கோடி ரூபாயாக குறைத்தது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, நோய் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பு, சீனாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு, அதிகரிக்கும் பணவீக்க விகிதம் போன்ற பல காரணங்களால் பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

ஐ.பி.ஓ

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவியது.

இந்தப் பிரச்னைகளுக்கு நடுவே மத்திய ரிசர்வ் வங்கி எல்ஐசி பங்கு மூலதன வெளியீடு தொடங்கிய முதல் நாளில் வட்டி விகிதங்களை உயர்த்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கெனவே சரிந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகளில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல மேலும் சரிவை இது ஏற்படுத்தியது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்திற்கு போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.

ஆனால் நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை சிறு முதலீட்டாளர்கள் தாங்கி பிடித்துள்ளார்கள் என்றே தற்போது கூற முடியும். எல்ஐசி பங்கு மூலதன வெளியீட்டிற்கு நேற்று முடிவடைந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1.79 மடங்கு பங்குகளுக்கு விண்ணப்பம் வந்துள்ளது. இதில் மிகவும் குறைவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிரிவில் மிகக் குறைந்த அளவு விண்ணப்பமாக 0.67 மடங்கு விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

ஆனால் அதற்கு நேர்மாறாக சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் அதிக பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். எல்ஐசி நிறுவனத்தில் பாலிசிதாரர்களுக்கு பங்கு விலையில் 60 ரூபாயும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு கீழ் விண்ணப்பிக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்கு விலையில் 45 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவுகளில் நேற்றைய நிலவரப்படி பாலிசிதாரர் பிரிவில் அதிகபட்சமாக 5.04 மடங்கிற்கும், எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பிரிவில் 3.79 மடங்கிற்கும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 1.59 மடங்கிற்கும் விண்ணப்பம் செய்து நமது இந்திய சிறு முதலீட்டாளர்கள் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

எல்ஐசி

இந்திய பெரு முதலீட்டாளர்களும் தங்கள் பிரிவின் கீழ் 1.24 மடங்கிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் பங்குகள் விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி தேதி என்பதால் இன்னும் அதிக அளவு விண்ணபங்கள் இன்று பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதிய மைல்கல்லாக நேற்றைய நிலவரப்படி 5.9 மில்லியன் விண்ணப்பங்கள் எல்ஐசி பங்கு வேண்டி விண்ணப்பிக்கபட்டுள்ளன. முன்னாள் சாதனையாக 4.8 மில்லியன் விண்ணப்பங்கள் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு வந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மூலதன வெளியீடு முறியடித்துள்ளது. இன்று பதிவாகும் விண்ணப்பங்கள் சேர்த்தால் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 7 மில்லியன் என்ற அளவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் இந்த நிகழ்வு சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கி செல்வதற்கு வழிவகுத்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்கள் தமது பான் நம்பரை எல்ஐசி பாலிசி யுடன் இணைக்க சொல்லி கேட்ட பொழுது 4.4 கோடி பாலிசிதாரர்கள் தமது பான் எண்ணை பாலிசியுடன் இணைத்து இருந்தனர். மேலும் கடந்த 2 மாதங்களில் மிக அதிக அளவில் சிறு முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கை தொடங்கி இருந்தனர். தற்போது அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து இருப்பதை பார்க்கும் பொழுது புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளதை நம்மால் உணர முடிகிறது.

அந்தவகையில் எல்ஐசியின் பங்கு மூலதன வெளியீடு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்தியப் பங்குச் சந்தையில் பெருமளவு முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே செய்து வந்தனர்.

ஐ.பி.ஓ

கடந்த ஒரு வருடமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்று வந்தாலும் நமது பங்கு சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கவில்லை. அதற்கு காரணம் நமது பங்குச் சந்தையை உள்நாட்டு பெரு முதலீட்டாளர்களும், சிறு முதலீட்டாளர்களும் தாங்கிப் பிடிப்பது ஆகும். தற்போது இன்னும் அதிக அளவு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இது நிச்சயம் நமது பங்கு்ச் சந்தைக்கு பயனுள்ள விஷயமாக பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தையில் முதலீடு செய்ய வந்திருக்கும் புதிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளை பற்றி நன்கு அறிந்து நல்ல நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது அவர்களுக்கு நிச்சயம் நல்ல லாபத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் ஐயமில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.