‘ஆக்டிங்’ மேயராக கணவர்? – தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை மாநகராட்சி மேயர்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணியை விட அவரின் கணவர் தான் ஆக்டிங் மேயராக செயல்பட்டு வருகிறார் என்று கவுன்சிலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொறுப்பேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்போது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று மதுரை திமுகவினரின் பழைய அரசியலை மறைமுகமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் ‘‘மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு இது புது ஆரம்பம். புதிய மேயர் இந்திராணி மீது தெளிவாக நம்பிக்கை இருக்கிறது. இதுவரை அடையாத வளர்ச்சியும் முன்னேற்றமும் மதுரை மாநகராட்சியில் இனி நடக்கும், ’’ என்று உறுதியளித்தார்.

நிதியமைச்சரின் இந்த நம்பிக்கைக்கு மாறாக, மேயராக இந்திராணி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். ”உள்ளாட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரநிதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அவர்களின் நிர்வாகங்களில் அவரது கணவர், குடும்பத்தினர் தலையிட கூடாது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனால், மதுரை மாநகராட்சி நிர்வாகங்களில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அவரை மீறி மேயரை சந்திப்பது இயலாத காரியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. மாமன்ற பார்வையாளர்கள் மாடத்தில் பார்வையாளர்கள் போர்வையில் திமுகவினர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தை நடத்த ஒத்துழையுங்கள் என்று கூறியதிற்கு, அவர்களை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாமன்ற கூட்டரங்கில் ஒரே பகுதியில் ‘சீட்’ ஒதுக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள், மேயரிடம் முறையிட அவரது அறைக்கு சென்றனர்.

அவர்களை மேயர் கணவர் பொன்வசந்த் அழைத்து பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். இதை படமெடுத்த, வீடியோ எடுத்த செய்தியாளர்களை பார்த்து ஆவேசமடைந்த மேயர் கணவர் ஆதரவாளர்கள் கீழே தள்ளிவிட்டு அறை கதவை சாத்தினர். அதை தடுக்காமல் மேயர் கணவரும் சேர்ந்து கதவை சாத்தினார். இதில், இரு செய்தியாளர்கள் நெற்றியில் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் கணவர், அவரது ஆதரவாளர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் போலீஸார் அங்கு வரவே மேயர் கணவர், செய்தியாளர்களை சமாதானம் செய்தார். மேயர் இந்திராணி மாநகராட்சி கூட்டத்தில் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். சாதாரண இருக்கை பிரச்சனையை மேயர் எளிதாக முன்கூட்டியே திட்டமிட்டு தீர்வு கண்டு இருக்கலாம். அதைவிட்டு அதுவே பெரும் பிரச்சனையாகி மாமன்ற கூட்டம் கடைசியில் களபேரமானது.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், ‘‘மேயராகுவதற்கு முன்புவரை இந்திராணிக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் அவரது கணவர் ஆக்டிங் மேயராக செயல்படுகிறார். ஏற்கநவே இந்திராணி மேயராக பொறுப்பேற்ற சில நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் தென்மாவட்ட சுற்றுப்பயணம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரை மதுரை மாவட்ட திமுகவினர் அனைவரும் வரவேற்றனர். ஆனால், மேயர் இந்திராணி முதலமைச்சரை வரவேற்க செல்லவில்லை. அது அப்போது சர்ச்சையானது. அதன்பிறகே மேயர் இந்திராணி, சென்னை சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர்தான் தற்போது மேயரின் தனிப்பட்ட உதவியாளராக உள்ளார். அவர் மேயர் பங்கேற்கும் விழா மேடையில் அவரது அருகே இருக்கையில் அமர்ந்து கொள்வது, அவரை நிழல் போல் தொடர்வது போன்றவற்றால் அந்த பெண் யார்? என்று சர்ச்சை வெடித்தது. நிதிஅமைச்சருடன் விழாவில் பங்கேற்கும்போது அவர் அவசரமாக இடையில் புறப்பட நேரிட்டால் மேயரும் அவருடன் எழுந்து சென்றுவிடுகிறார். இதற்கிடையில் தற்போது மேயர் கணவர் முன்னிலையில் அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை தாக்கிய சம்பவத்தாலும் மேயர் இந்திராணி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.