திருச்சி ‘தலைவலி’க்கு தீர்வு: 3 மாதத்தில் ரெடியாகும் அரிஸ்டோ மேம்பாலம்!

க.சண்முகவடிவேல்

KN Nehru assures Trichy Aristo bridge work completes within 3 months: திருச்சியில் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜங்சன் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் (சென்னை சாலையை நோக்கிய) பணிக்கு மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டதையடுத்து நிறைவடையாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதிகட்டப் பணிகளை முடிப்பதற்கான வேலைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன.

இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தயங்கி வந்தது.

எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை 2018-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும்.

ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ன.

சமீபத்தில் திருச்சி வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் விடுபட்ட பாலப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், கடுமையான முயற்சியால் மேம்பாலம் நிறைவு பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களும், இங்குள்ள எம்.பி.யும் பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தும் பாலம் கட்டுமானப்பணி என்பது கிடப்பில்தான் இருந்தது.

இதையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக உருவாகும் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையம்: மெரினா வரும் மக்களுக்கு வரப்பிரசாதம்

ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் திருச்சி மக்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த துறை அமைச்சர் மற்றும் எம்.பி.யின் கடும் முயற்சியினால் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தை தமிழக அரசுக்கு தற்போது கொடுத்துள்ளார்கள்.

இதனையடுத்து அரிஸ்டோ மேம்பாலப்பணிகள் வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக இங்குள்ள மரங்களை அகற்றும் பணிகள் துவங்கியிருக்கின்றது. விடுபட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பாலம் 135 மீட்டர் நீளத்திற்கும், 10½ மீட்டர் அகலத்திற்கும் கட்டப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை முதல் பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி இடைவிடாது நடைபெறும். 3 மாதங்களில் பணிகள் முடித்து போக்குவரத்திற்கு முழுமையாக பாலம் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.