பேரறிவாளனின் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி : உடல் நலம் பேண வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு தீர்ப்புக்காகத் தான் நானும், ஒட்டுமொத்த  தமிழ்நாட்டு மக்களும் காத்திருந்தோம். இது நீதிக்கும், நியாயத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

பேரறிவாளனின் வெற்றிக்கு முதன்மைக் காரணம் அவர் நடத்திய சட்டப் போராட்டம் என்றால், அதை விட முக்கிய காரணம் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் உழைப்பும், போராட்டமும் தான். பேரறிவாளன் மட்டுமின்றி 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மாற்றியதில் ஒற்றை பெண்மணியாக அவரது போராட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு. பேரறிவாளனின் விடுதலைக்கு  ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், பொதுவானவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் கூட கலந்து கொண்டது. ஏழு தமிழர் விடுதலையை கூட்டணிக்கான நிபந்தனையாக விதிக்கும் அளவுக்கு இதில் பாமக உறுதியாக  இருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி களத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவர் நீதியரசர் கே.டி. தாமஸ், பின்னாளில் அவர்களின்  தூக்கு தண்டனையை செயல்படுத்தக்கூடாது; அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியதற்கும், பேரறிவாளன் தண்டிக்கப்படுவதற்கான காரணமாக இருந்த அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த விசாரணை அதிகாரி தியாகராஜன், பின்னாளில் வாக்குமூலத்தை திரித்து பதிவிட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கும் இந்த எழுச்சி தான் காரணமாக இருந்தது. இத்தகைய சூழலை உருவாக்கியதில் அற்புதம் அம்மாளின் உழைப்புக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

பேரறிவாளனின் விடுதலை பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் அவரது விடுதலையை தாமதப்படுத்தின. சிறையில் பல்வேறு உடல்நலக் குறைவுகளுக்கும் அவர் ஆளானார். சட்டப் போராட்டம் நடத்தி இப்போது நிரந்தரமாக விடுதலையாகி இருக்கும் பேரறிவாளன் அவரது உடல்நலத்தை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும். அவருக்கான வாழ்க்கையை அர்த்தத்துடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.  

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட  மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.